திருவள்ளூரில் ரூ.2.40 கோடியில் தொழிலாளர் துறை அலுவலக கட்டிடம் திறப்பு
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம் பெரும்பாக்கம் கிராமத்தில் ரூ.2 கோடியே 40 லட்சத்து 15 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக வளாக கட்டிடத்தை திறந்து வைத்தார்.
அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் பெரும்பாக்கம் கிராமத்தில் 50 சென்ட் நிலப் பரப்பில் 10,600 சதுர அடி கட்டிடப் பரப்பில் தரை மற்றும் முதல் தளத்துடன் ரூ.2 கோடியே 40 லட்சத்து 15 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள இவ்வளாகத்தில் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்), தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகங்கள் மற்றும் அதன் சார்நிலை அலுவலகங்களான தொழிலாளர் துணை ஆய்வாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், முத்திரை ஆய்வாளர் அலுவலகங்கள் ஆகியவை அமைய பெற்றுள்ளன.
திருவள்ளூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருவள்ளூர் எம்.எல்.ஏ.வி.ஜி. ராஜேந்திரன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். அவருடன் நகர்மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், கூடுதல் தொழிலாளர் ஆணையர் உமாதேவி, தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சோபனா, தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தனபால் மற்றும் அலுவலர்கள் இருந்தனர்.