குரூஸ்பர்னாந்து மணிமண்டபம் வருகிற 13-ந்தேதி திறப்பு- அமைச்சர் மு.பெ.சாமிநாதன்


குரூஸ்பர்னாந்து மணிமண்டபம் வருகிற 13-ந்தேதி திறப்பு- அமைச்சர் மு.பெ.சாமிநாதன்
x
தினத்தந்தி 6 Oct 2023 12:15 AM IST (Updated: 6 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து மணிமண்டபம் வருகிற 13-ந் தேதி திறக்கப்பட உள்ளதாக அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி எம்.ஜி.ஆர். பூங்காவில் ரூ.77 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பில் ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்து மணிமண்டபம் கட்டப்பட்டு உள்ளது. அதை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று மாலை ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மக்களுக்காக அரும்பணியாற்றிய ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்துக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட்டு உள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 13-ந் தேதி காணொலி காட்சி மூலம் இந்த மணிமண்டபத்தை திறந்து வைக்க உள்ளார்.

இங்கு பொதுமக்கள் சில ஆலோசனைகளை வழங்கி உள்ளனர். அதனையும் நிவர்த்தி செய்ய துறை நடவடிக்கை எடுக்கும். இந்த சிலை விரைவாகவும், நேர்த்தியாகவும் அமைக்கப்பட்டு உள்ளது. வீரமாமுனிவருக்கு காமநாயக்கன்பட்டியில் மணிமண்டபம் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த மண்டபமும் வருகிற 13-ந் தேதி திறந்து வைக்கப்பட உள்ளது. பணிகளை விரைந்து முடித்து மக்களின் பார்வைக்கு ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

பரமக்குடியில் இமானுவேல் சேகரனுக்கு அரங்கம், மணிமண்டபம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்து உள்ளார். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடம் அருகே மண்டபம் அமைக்கும் கோரிக்கை வந்து உள்ளது. அதனையும் ஆய்வு செய்து உள்ளோம். தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களுக்கும் அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார்.

இந்த ஆய்வின்போது, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன், மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதைத்தொடர்ந்து எட்டயபுரம் மகாகவி பாரதியார் மணிமண்டபத்தில் ரூ.5.06 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஒளி ஒலி காட்சியை நேற்று இரவு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்து பார்வையிட்டார். மேலும் பாரதியாரின் முழு உருவ சிலைக்கு அமைக்கப்பட்ட ஒளிரும் வண்ண விளக்குகளை இயக்கி வைத்து, சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


Next Story