ரூ.12¾ லட்சம் மதிப்பில் புணரமைக்கப்பட்ட பூமாலை வணிக வளாகம் திறப்பு
திருவண்ணாமலை வேங்கிக்காலில் ரூ.12¼ லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்ட பூமாலை வணிக வளாகத்தை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பூமாலை வணிக வளாகம்
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் 27 மாவட்டங்களில் புனரமைக்கப்பட்ட பூமாலை வணிக வளாகத்தினை தமிழ்நாடு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
அதைத் தொடர்ந்து திருவண்ணாமலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருவண்ணாமலை திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) சையத் சுலைமான் தலைமை தாங்கினார். வேங்கிக்கால் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி தமிழ்செல்வன் முன்னிலை வகித்தார். திருவண்ணாமலை ஒன்றியக்குழு தலைவர் குத்து விளக்கேற்றி வைத்து பூமாலை வணிக வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ''திருவண்ணாமலை வேங்கிக்கால் ஊராட்சியில் உள்ள பூமாலை வணிக வளாகம் ரூ.12 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பில் புனரமைக்கப்பட்டு உள்ளது. இதில் மகளிர் சுய உதவி குழு மூலம் உற்பத்தி செய்யப்பட்ட உற்பத்தி பொருட்களான ஆரணி பட்டுப்புடவைகள், மொடையூர் கற்சிற்பங்கள், ஆவூர் பாய் வகைகள், ஜவ்வாது மலை விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் மதிப்பு கூட்டி விற்பனை செய்யப்படும் பொருட்கள், துரிஞ்சாபுரம் ஒன்றியத்திலிருந்து தயார் செய்யப்பட்ட சணல் பைகள்,
திருவண்ணாமலை வட்டாரத்தில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து வகையான சேமியா மற்றும் ஊறுகாய் வகைகள் உள்ளிட்ட மகளிர் சுய உதவி குழுக்களின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட வீட்டு உபயோகப் பொருட்கள், பரிசு பொருட்கள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் விற்பனை செய்யப்படும்.
இயற்கை விவசாய பொருட்கள்
இவ்வளாகத்தில் தினமும் காலை 5 மணி முதல் 9 மணி வரை மகளிர் சுய உதவி குழுக்களின் மூலம் செங்கம் ஒருங்கிணைந்த தொகுப்பு பண்ணையத்தின் சார்பில் உற்பத்தி செய்யப்படும் இயற்கை விவசாய பொருட்களான பழ வகைகள், காய்கறிகள், கீரை வகைகள், இயற்கையில் விளைந்த பொருட்கள், கிராமங்களில் இருந்து நேரடியாகவும் விற்பனை செய்யப்படும்.
மேலும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்யப்படும். மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை சிறுதானிய பாரம்பரிய உணவு அங்காடிகள் செயல்படும். அதே போல் இவ்வளாகத்தில் குளிர்சாதன வசதியுடன் அமைந்துள்ள கூட்ட அரங்கமும் வாடகைக்கு விடப்படும்'' என்றனர்.
நிகழ்ச்சியில் மகளிர் திட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.