விருத்தாசலத்தில், முன்னாள் எம்.எல்.ஏ. மகனை துப்பாக்கியால் சுட்ட வழக்கு: மேலும் 2 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
விருத்தாசலத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. மகனை துப்பாக்கியால் சுட்ட வழக்கில் மேலும் 2 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
துப்பாக்கி சூடு
விருத்தாசலம் சேலம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் தியாகராஜன். முன்னாள் எம்.எல்.ஏ.. இவரது மகன் இளையராஜா (வயது 45). இவர் கடந்த 8.9.2023 அன்று மணவாளநல்லூரில் உள்ள தனது நிலத்தை பார்ப்பதற்காக காரில் சென்றார். அப்போது அவரை ஒரு கும்பல் வழிமறித்து திடீரென துப்பாக்கியால் சுட்டது. இதில் பலத்த காயமடைந்த அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இது பற்றிய புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அவரை தேர்தல் முன்விரோத தகராறில் பாளையங்கோட்டை வடக்குபாளையம் ஆரோக்கியசாமி மகன் விஜயகுமார் (வயது 27), மணவாளநல்லூர் ராஜசேகர் மகன் புகழேந்திராஜா (27), ராஜா ஆடலரசு (25), சூர்யா என்கிற சூர்யபிரகாஷ் (35) உள்பட 12 பேர் துப்பாக்கியால் சுட்டு கொலை முயற்சி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 12 பேரை போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
முன்னதாக அவர்களிடம் இருந்து 7 துப்பாக்கிகள், 25 தோட்டாக்கள், கார், இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய விஜயகுமார், புகழேந்திராஜா ஆகியோரின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில், அவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
அதன்பேரில் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவின்பேரில் விஜயகுமார், புகழேந்தி ராஜா ஆகிய 2 பேரையும் விருத்தாசலம் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து, அதற்கான உத்தரவு நகலை சிறையில் இருக்கும் அவர்களிடம் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கினர்.