விருதுநகரில் விஜயபிரபாகர் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டுள்ளார் - பிரேமலதா ஆவேசம்


விருதுநகரில் விஜயபிரபாகர் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டுள்ளார் - பிரேமலதா ஆவேசம்
x

விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

சென்னை கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

விஜயபிரபாகர் தோல்வியடையவில்லை தோற்கடிக்கப்பட்டுள்ளார்; வீழ்ச்சியடையவில்லை சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டிருக்கிறார் இதுதான் உண்மை. அதற்கான ஆதாரங்கள் எல்லாம் என்னிடம் உள்ளது. விஜயபிரபாகர் கடைசி நிமிடங்கள் வரை போராடினார்.

மிக மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே விஜய பிரபாகர் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார். 3 மணி முதல் 5 மணிவரை வாக்கு எண்ணிக்கையை ஆட்சியர் நிறுத்தியது ஏன்?. விருதுநகர் தொகுதி முடிவு அறிவிக்கும் முன் 40 தொகுதிகளில் வெற்றி என முதல்வர் கூறியது ஏன்?. 13-வது சுற்றுக்கு பின்னர் பல முறைகேடுகள் நடந்தது உண்மை.

அதிகாரப்பூர்வ அறிவிப்பும், களத்தில் இருந்து வந்த தகவல்களும் முரண்பாடாக இருந்தன. தபால் ஓட்டுகளை நள்ளிரவில் எண்ணியது ஏன்?. விருதுநகர் ஆட்சியருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது; அவரது போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளார். வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடந்துள்ளது.

விருதுநகர் தொகுதியில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளோம். தேர்தல் ஆணையம் நல்ல முடிவை கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. 45 நாட்கள் வரை மறு வாக்கு எண்ணிக்கை கோர உரிமை உள்ளது. தேர்தல் ஆணையம் உரிய நீதியை வழங்க வேண்டும்.

அதிமுகவினர் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் வெற்றி உறுதியாக கிடைக்கும். அதிமுகவில் இருப்பது உட்கட்சி பிரச்சினை. அதிமுகவில் அனைவரும் ஒன்று சேர்ந்தால் அது வரவேற்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story