விழுப்புரத்தில் 2 வீடுகளில் ரூ.4¾ லட்சம் நகை- பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
விழுப்புரத்தில் 2 வீடுகளில் ரூ.4¾ லட்சம் மதிப்புள்ள நகை- பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பெரியார் நகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 45). இவர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள எலக்ட்ரிக்கல் கடையில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ரமேஷ் தனது குடும்பத்தினருடன் வீட்டில் படுத்து தூங்கினார். நேற்று காலையில் எழுந்து பார்த்தபோது வீட்டின் ஒரு அறையிலிருந்த பீரோ திறக்கப்பட்டு துணிமணிகள் மற்றும் பொருட்கள் சிதறிக்கிடந்ததை கண்டு திடுக்கிட்டனர். உடனே அதில் வைத்திருந்த நகை, பணத்தை தேடியபோது 6 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் கொள்ளை போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.
புகைபோக்கும் துளையை உடைத்து
உடனே இதுபற்றி ரமேஷ், விழுப்புரம் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த வீட்டில் பதிந்திருந்த தடயங்களை சேகரித்தனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள், ரமேஷ் வீட்டின் பக்கவாட்டில் உள்ள புகைபோக்கும் துளையை உடைத்துக்கொண்டு வீட்டிற்குள் புகுந்து கள்ளச்சாவி மூலம் பீரோவை திறந்து அதில் வைத்திருந்த நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.3¼ லட்சமாகும்.
மற்றொரு சம்பவம்
இதேபோல் விழுப்புரம் சாலாமேடு சண்முகா நகரில் வசித்து வருபவர் சலீம் மனைவி பாத்திமா (48). இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு உறவினரின் திருமண விழாவிற்காக சென்னைக்கு சென்றிருந்தார். பின்னர் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் பாத்திமா, விழுப்புரம் வந்தார்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டார். உடனே உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 4½ பவுன் நகை கொள்ளை போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். இதன் மதிப்பு ரூ.1½ லட்சமாகும்.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
இந்த கொள்ளை சம்பவங்கள் குறித்து ரமேஷ், விழுப்புரம் நகர போலீஸ் நிலையத்திலும், பாத்திமா, விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்திலும் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.