விழுப்புரத்தில் பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி 2 பேருக்கு வலைவீச்சு
விழுப்புரத்தில் பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம் வழுதரெட்டி ஸ்ரீராம் நகரில் வசித்து வருபவர் சுரேஷ். இவர் விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் சாலையில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று காலை வழக்கம்போல் தனது கடைக்கு சென்றார். பின்னர் காலை 10 மணியளவில் சுரேசின் மனைவி புனிதவள்ளி (வயது 49) வீட்டை பூட்டிவிட்டு தனது கடைக்கு நடந்து சென்றார். எல்லீஸ்சத்திரம் புறவழிச்சாலை அருகில் சென்றபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 25 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் திடீரென, புனிதவள்ளி கழுத்தில் கிடந்த 7 பவுன் சங்கிலியை பறிக்க முயன்றனர். இதில் சுதாரித்துக்கொண்ட புனிதவள்ளி, தனது தங்கச்சங்கிலி பறிபோகாமல் இருக்க அதை கையால் கெட்டியாக பிடித்துக்கொண்டபடி தரையில் உட்கார்ந்து திருடன்... திருடன்... என்று கூச்சல் போட்டார்.
இந்த சத்தம் கேட்டதும் அக்கம், பக்கத்தில் இருந்த பொதுமக்கள் அங்கு விரைந்து ஓடி வந்தனர். பொதுமக்கள் வருவதை பார்த்ததும் அந்த வாலிபர்கள் இருவரும் அங்கிருந்து மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர். இதனால் புனிதவள்ளி அணிந்திருந்த நகை பறிபோகாமல் அதிர்ஷ்டவசமாக தப்பியது. இதுகுறித்து அவர், விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற 2 வாலிபர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சி பதிவுகளை கைப்பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.