குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு வாகன போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.


குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு வாகன போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
x
தினத்தந்தி 23 Oct 2023 12:15 AM IST (Updated: 23 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு வாகன போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு வாகன போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் கோ.லட்சுமிபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

போக்குவரத்து மாற்றம்

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு நாளை மறுநாள் (புதன்கிழமை) வரை போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.

இதன்படி, திருச்செந்தூரில் இருந்து குலசேகரபட்டினம் வழியாக மணப்பாடு, பெரியதாழை, உவரி மார்க்கமாக கன்னியாகுமரி செல்லும், திருவிழாவுக்கு வராத மற்ற வாகனங்கள் அனைத்தும் திருச்செந்தூர், பரமன்குறிச்சி, மெஞ்ஞானபுரம், சாத்தான்குளம், மணிநகர் மார்க்கமாக செல்ல வேண்டும்.

அதேபோன்று கன்னியாகுமரி, உவரி, பெரியதாழை, மணப்பாடு வழியாக வரும் திருவிழாவுக்கு வராத இதர வாகனங்கள் பெரியதாழை, படுக்கப்பத்து, மணிநகர், சாத்தான்குளம், மெஞ்ஞானபுரம், பரமன்குறிச்சி வழியாக திருச்செந்தூர் செல்ல வேண்டும் அல்லது கன்னியாகுமரி, உவரி, திசையன்விளை, சாத்தான்குளம், மெஞ்ஞானபுரம் வழியாக செல்ல வேண்டும்.

நெல்லை, தூத்துக்குடி

நெல்லை - தூத்துக்குடி மார்க்கமாக திருச்செந்தூர் வழியாக குலசேகரன்பட்டினம் வரும் அரசு சிறப்பு பஸ்கள் அனைத்தும், திருச்செந்தூர் இரும்பு ஆர்ச், மேல ரதவீதி, முருகாமடம் சந்திப்பு (தெப்பக்குளம்), ஆலந்தலை, கல்லாமொழி வழியாக குலசேகரபட்டினம் வடக்கூர் கிழக்கு கடற்கரை சாலை புறவழிச்சாலை கார்த்திகேயன் காம்ப்ளக்ஸ் அருகில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் நிறுத்த வேண்டும். அங்கிருந்து திரும்ப செல்லும் போது அதே வழித்தடம் வழியாக திருச்செந்தூர் முருகாமடம் வந்து அரசு ஆஸ்பத்திரி பின்புறம் வழியாக திருச்செந்தூர் பஸ் நிலையம் செல்ல வேண்டும்.

திசையன்விளை - தட்டார்மடம் - சாத்தான்குளம் - மெஞ்ஞானபுரம் மார்க்கத்தில் இருந்து குலசேகரபட்டினம் வரும் அரசு சிறப்பு பஸ்கள் அனைத்தும் தேரியூர் ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளி வழியாக தேரியூர் ஊருக்குள் வந்து, செட்டியாபத்து - கூழையன்குண்டு விலக்கு, உடன்குடி சத்தியமூர்த்தி பஜார் சந்திப்பு, உடன்குடி பேருந்து நிலையம், வில்லிக்குடியிருப்பு சந்திப்பு வழியாக குலசேகரபட்டினம் கிழக்கு கடற்கரைசாலை பைபாஸ் சந்திப்பு, தருவைகுளம் அருகில் பிரியா கேஸ் குடோன் எதிர்புறம் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் நிறுத்தி, திரும்ப செல்லும்போது அதே வழித்தடம் வழியாக செல்ல வேண்டும்.

கன்னியாகுமரி - உவரி, பெரியதாழை, மணப்பாடு மார்க்கமாக வரும் அரசு சிறப்பு பஸ்கள் அனைத்தும் குலசேகரபட்டினம் தெற்கு பகுதி கிழக்கு கடற்கரைசாலை பைபாஸ் சாலை தீதத்தாபுரம் சந்திப்பு அருகில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் நிறுத்தி, திரும்ப செல்லும்போது அதே வழித்தடம் வழியாக செல்ல வேண்டும்.

சொந்த வாகனங்கள்

பக்தர்கள் தங்கள் சொந்த வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு குலசேகரன்பட்டினம்-உடன்குடி சாலையில் தருவைகுளத்தை சுற்றி உள்ள பகுதிகளில் 19 வாகன நிறுத்தங்களும் மற்றும் குலசேகரபட்டினம் கிழக்கு கடற்கரை சாலை மணப்பாடு சாலையில் 10 வாகன நிறுத்தங்களும் என மொத்தமாக 29 வாகன நிறுத்தங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தனியார் வாகனங்கள் வாகன நிறுத்துமிடம் வரை வந்து திரும்பி செல்வதற்காக பல்வேறு சிறப்பு வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. அவைகளை வாகன ஓட்டிகள் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story