வேப்பங்காடு ஊராட்சியில் தார்சாலையை அகலப்படுத்த வேண்டும்
வேப்பங்காடு ஊராட்சியில் தார்சாலையை அகலப்படுத்த வேண்டும்
கரம்பயம்:
விபத்துகளை தவிர்க்க வேப்பங்காடு ஊராட்சியில் தார்சாலையை அகலப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.
வேப்பங்காடு ஊராட்சி
பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வேப்பங்காடு ஊராட்சியில் குறுகலான தார்சாலை உள்ளது. இந்த சாலையை அந்த பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பட்டுக்கோட்டையில் இருந்து ஏனாதி வழியாக பின்னையூர் செல்லக்கூடிய அரசு பஸ்கள், பள்ளி கல்லூரி பஸ்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் வேப்பங்காடு ஊராட்சி வழியாக தான் செல்ல வேண்டும். ஏனாதி ஆற்றுப்பாலத்தில் இருந்து வேப்பங்காடு ஊராட்சி வரை உள்ள தார்சாலை குறுகலாக உள்ளது.
தார்சாலையை அகலப்படுத்த வேண்டும்
இதனால் அந்த சாலையில் வாகனம் வரும் போது எதிரே மற்றொரு வாகனம் வந்தால் வழிவிட முடியாமல் சிரமப்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே விபத்துகளை தவிர்க்கும் வகையில் வேப்பங்காடு ஊராட்சியில் குறுகலான தார்சாலையை அகலப்படுத்தி தர வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து ேவப்பங்காடு ஊராட்சி மன்ற தலைவர் சிவராஜன், தஞ்சை கோட்ட பொறியாளர் அலுவலத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளார்.