வேலூர் மாவட்டத்தில் 1,05,071 பேர் விண்ணப்பங்களை பதிவு செய்யவில்லை
வேலூர் மாவட்டத்தில் 1,05,971 பேர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பெற்றும் பதிவு செய்யவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மகளிர் உரிமைத்தொகை திட்டம்
தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் அடுத்த மாதம் (செப்டம்பர்) 15-ந் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தில் தகுதியான நபர்களை தேர்வு செய்வதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு விண்ணப்பங்கள் வீடு, வீடாக வினியோகிக்கப்பட்டன. பின்னர் சிறப்பு முகாம்களில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு செல்போன் செயலியில் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன.
வேலூர் மாவட்டத்தில் 699 ரேஷன் கடைகளில் 4,53,942 குடும்ப அட்டைகள் உள்ளன. ரேஷன்கடை ஊழியர்கள் கடந்த மாதம் வீடு, வீடாக சென்று விண்ணப்பங்கள் வழங்கினர். அப்போது பலர் விண்ணப்பங்களை வாங்க மறுத்து விட்டனர். சிலர் வெளியூர் சென்றிருந்தனர். சில வீடுகள் பூட்டப்பட்டிருந்தது. அதனால் 4,35,753 மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.
1,05,071 விண்ணப்பங்கள்...
விண்ணப்பம் பெறாதவர்கள் சிறப்பு முகாமில் அவற்றை பெற்று பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அதனையும் அவர்கள் பயன்படுத்தி கொள்ளவில்லை. வேலூர் மாவட்டத்தில் 18,189 பேர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பெறவில்லை.
மாவட்டம் முழுவதும் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம் 2 கட்டமாக நடந்தது. அதைத்தவிர அரசின் உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள், ஓய்வூதியம் பெறும் குடும்பத்தினர் விண்ணப்பிக்க 3 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற்றது.
இந்த முகாம்களில் விடுபட்ட விண்ணப்பதாரர்களும் பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் 3,30,682 பேர் மட்டுமே மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர். 1,05,071 குடும்ப அட்டைதாரர்கள் விண்ணப்பங்களை பெற்றும் அவற்றை பதிவு செய்யவில்லை.
மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பெறாதவர்களிடம் அதற்கான விளக்கம் கேட்கும் பணியில் ரேஷன்கடை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.