வேதாரண்யத்தில், பைபர் படகு மீனவர்கள்மீன்பிடிக்க செல்லவில்லை

வங்க கடலில் மோகா புயல் உருவாக உள்ளதால் வேதாரண்யத்தில், பைபர் படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
வேதாரண்யம்:
வங்க கடலில் மோகா புயல் உருவாக உள்ளதால் வேதாரண்யத்தில், பைபர் படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
மோகா புயல்
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், மணியன்தீவு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வங்க கடலில் மோகா புயல் உருவாக இருப்பதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது. இதனால் கடலில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மறு அறிவிப்பு வரும்வரை மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
கடந்த மாதம் (ஏப்ரல்) 14-ந் தேதி முதல் ஜூன் 15-ந்ேததி வரை மீன்பிடி தடைக்காலமாகும். இந்த தடைக்காலத்தில் விசைபடகுகள் மீன்பிடிக்க செல்லாமல் கரையோரம் நிறுத்தப்பட்டு பழுதுபார்த்தல், வண்ணம் பூசுதல் போன்ற பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் சிறிய பைபர் படகுகள் கடலில் குறைந்த தூரம் சென்று மீன் பிடித்து வர அனுமதி உள்ளது.
மீன்வளத்துறை எச்சரிக்கையால் வேதாரண்யம் பகுதியை சேர்ந்த பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க நேற்று செல்லவில்லை. இதன் காரணமாக மீனவர்கள் தங்களது பைபர் படகுகளை கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.