தூத்துக்குடியில் 127 பயனாளிகளுக்கு மின்னணு ரேஷன் கார்டு
தூத்துக்குடியில் 127 பயனாளிகளுக்கு மின்னணு ரேஷன் கார்டுகளை கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்.
தூத்துக்குடியில் 127 பேருக்கு மின்னணு ரேஷன்கார்டுகளை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று வழங்கினார்.
341 மனு
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, பட்டாமாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் அடங்கிய 341 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.
ரேஷன் கார்டு
தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் தாலுகா தோழப்பண்ணையைச் சேர்ந்த இசக்கிராஜன் வேலாயுதம் என்பவர் ஓமன் (மஸ்கட்) நாட்டில் பணிபுரிந்த போது காலமானதால் அவரது இறப்புக்காக வரப்பெற்ற இழப்பீட்டுத் தொகை ரூ.1 லட்சத்து 52 ஆயிரத்து 272-க்கான காசோலையை அவரது வாரிசுதாரரான மனைவி ராஜங்கரி என்பவரிடம் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார். இதே போன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், எட்டையபுரம் தாலுகா வெம்பூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஸ்வரி என்பவருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா, உணவு பொருள் வழங்கல் துறை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் தூத்துக்குடி தாலுகாவை சேர்ந்த 127 பயனாளிகளுக்கு மின்னணு ரேஷன் கார்டுகளை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்.
முன்னதாக மாற்றுத்திறனாளிகளை கீழ்தளத்தில் நேரடியாக சென்று சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில் 30 பேர் மனுக்களை கொடுத்தனர். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.