தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவர் கைது
தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடியில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் விற்பனைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தனிப்படை போலீசார் ரோந்து
தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை சிலர் சட்டவிரோதமாக விற்று வருவதாக போலீஸ் சூப்பிரண்டு பாலாஜிசரவணனுக்கு புகார்கள் சென்றனர். இதை தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் தீவிரகண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வகையில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் பழைய பஸ்நிலையம் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தூத்துக்குடி டி.சவேரியார்புரத்தை சேர்ந்த சந்திரபாலன் (வயது 59) என்பவர் பஸ் நிலையம் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றுக்கொண்டிருந்தார். போலீசாரை பார்த்தவுடன் அவர் தப்பி செல்ல முயன்றுள்ளார்.
உடனடியாக போலீசார் சந்திரபாலனை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அவர் 1,970 தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளும், 720 பழைய லாட்டரி சீட்டுக்களும் இருந்தன. உடனடியாக போலீசார் அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுக்கள், மோட்டார் சைக்கிள், ஒரு செல்போன், ரூ.1,100 ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கைது
தொடர்ந்து பிடிபட்ட சந்திரபாலன் மற்றும் லாட்டரி சீட்டு உள்ளிட்டவற்றை மத்தியபாகம் போலீஸ் நிலையத்தில் தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர். இதுகுறித்து மத்தியபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்திரபாலனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.