தூத்துக்குடியில்வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
தூத்துக்குடியில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு செய்து, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடியில் மத்திய அரசின் புதிய சட்டமசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி நேற்று வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோரிக்கை
மத்திய அரசு இந்திய தண்டனை சட்டம், சாட்சிகள் சட்டம், குற்றவியல் சட்டங்கங்களின் பெயர்களை மாற்ற மசோதா தாக்கல் செய்து உள்ளது. அதே போன்று சட்ட பிரிவுகளில் மாற்றம் செய்து உள்ளது. சட்டத்தில் சமஸ்கிருதம், இந்தியை திணிக்கிறது. இதனை கண்டித்தும், புதிய சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் வக்கீல்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.
போராட்டம்
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்திலும் அனைத்து வக்கீல்களும் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடியில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு மற்றும் கோர்ட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு தூத்துக்குடி வக்கீல் சங்க தலைவர் செங்குட்டுவன் தலைமை தாங்கினார். பார்கவுன்சில் உறுப்பினர் பிரபு, செயலாளர் மார்க்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மூத்த வக்கீல் அதிசயகுமார், அர்ஜூன், சாத்தான்குளம் வக்கீல் சங்க தலைவர் ஜெகன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
இது குறித்து வக்கீல் சங்க தலைவர் செங்குட்டுவன் கூறும் போது, தமிழகத்தில் சுமார் ஒன்றரை லட்சம் வக்கீல்கள் உள்ளனர். இவர்கள் ஏற்கனவே சட்டம் படித்து தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் சட்டப்பிரிவுகள் உள்பட பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன. இதனால் தற்போது தொழில் செய்து வரும் வக்கீல்களுக்கு குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அனைத்து மாற்றங்களையும் வக்கீல்கள் படித்த பிறகே வாதாட முடியும். இதனால் வழக்குகளில் தொய்வு ஏற்படும். ஆகையால் சட்டத்தில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களை திரும்ப பெற வேண்டும் என்று கூறினார்.