தூத்துக்குடியில், அரசு ஊழியர்கள்கண்டன ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடியில், அரசு ஊழியர்கள்கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 March 2023 12:15 AM IST (Updated: 22 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில், அரசு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

தமிழக அரசு பட்ஜெட் அறிவிப்பில் அரசு ஊழியர்களுக்கு எந்தவித அறிவிப்பும் இடம் பெறாமல் ஏமாற்றப்பட்டதாக கூறி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நேற்று தூத்துக்குடியில் அரசு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மூட்டா மண்டல பொதுச் செயலாளர் சிவஞானம் தலைமை தாங்கினார். கல்லூரி அலுவலர் சங்க கிளைத்தலைவர் காந்திமதி, செயலாளர் வெள்ளத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பட்ஜெட்டில் ஏமாற்றம்

ஆர்ப்பாட்டத்தில், தமழ்நாடு அரசு பட்ஜெட் அறிவிப்பில் அரசு ஊழியர்களுக்கு எவ்வித அறிவிப்பும் இடம்பெறாமல் ஏமாற்றப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகை, சரண்டர், உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் உள்ளிட்டவற்றை உடனே வழங்க வேண்டும், தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், செவிலியர்கள் வருவாய் கிராம உதவியாளர்கள் மற்றும் ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்டவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

பணி நிரந்தரம்

ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையில் பணிபுரியும் பணியாளர்கள் ஆசிரியர்கள் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலி பணியிடங்கள் பூர்த்தி செய்ய வேண்டும், சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை முறைப்படுத்த வேண்டும். 7-வது ஊதிய குழுவின் 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் கந்தசாமி, மாரிமுத்துகுமார், வேலு, காட்வின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story