தூத்துக்குடியில், வெள்ளிக்கிழமைபுத்தக திருவிழா தொடங்குகிறது


தூத்துக்குடியில், வெள்ளிக்கிழமைபுத்தக திருவிழா தொடங்குகிறது
x
தினத்தந்தி 21 April 2023 12:15 AM IST (Updated: 21 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில், வெள்ளிக்கிழமை புத்தக திருவிழா தொடங்குகிறது

தூத்துக்குடி

தூத்துக்குடியில் புத்தக திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதை முன்னிட்டு நேற்று விழிப்புணர்வு ராட்சத பலூனை கனிமொழி எம்.பி. பறக்கவிட்டார்.

ராட்சத பலூன்

தூத்துக்குடி எட்டயபுரம் ரோடு சங்கரப்பேரி விலக்கு பகுதியில் உள்ள திடலில் 4-வது புத்தகத் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 01.05.2023 வரை 11 நாட்கள் நடக்கிறது. புத்தகத் திருவிழாவுடன் சேர்ந்து வருகிற 28-ந் தேதி முதல் 1-ந் தேதி வரை நெய்தல் கலைத்திருவிழாவும் கோலாகலமாக நடக்கிறது. இதில் நமது பாரம்பரிய உணவு வகைகளையும் அறிந்து கொள்ளும் வகையில் 40 அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த பணிகளை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி. நேற்று காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அரங்குகள் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். தொடர்ந்து புத்தகத்திருவிழா மற்றும் நெய்தல் கலைத்திருவிழா தொடர்பான வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பலூனை பறக்க விட்டார்.

ஆய்வின் போது, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் ச.தினேஷ்குமார், தாசில்தார் செல்வக்குமார் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

நெய்தல் கலைவிழா

தொடர்ந்து கனிமொழி எம்.பி நிருபர்களிடம் கூறும் போது, தூத்துக்குடியில் புத்தகத்திருவிழா மற்றும் நெய்தல் கலைத்திருவிழா நடக்கிறது. நாளை (அதாவது இன்று) தொடங்கும் புத்தகத் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் மாலையில் தமிழகத்தின் முக்கியமான ஆளுமைகள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் வாசிப்புப் பழக்கம் பற்றி பல்வேறு தலைப்புகளில் மக்களிடையே தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள். இந்த புத்தக திருவிழாவில் ஏறத்தாழ 110 புத்தக பதிப்பகங்களில் இருந்து புத்தகங்களை கொண்டு வந்து கண்காட்சியாக வைக்க இருக்கிறார்கள். மேலும், வருகிற 28-ந் தேதி மண் சார்ந்த கலைஞர்கள் மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த கலைஞர்கள் கலந்துகொள்ளும் நெய்தல் கலை விழா நிகழ்ச்சிகள் தொடங்குகிறது.

கண்காட்சி

புத்தக கண்காட்சியை முன்னிட்டு சிவகளையில் உள்ள அகழ்வாராய்ச்சிகள் பற்றிய ஒரு அரங்கும் தமிழ்நாடு தொல்லியல் துறை மூலம் இங்கு உருவாக்கப்பட இருக்கிறது. மேலும், புத்தகத்திருவிழாவின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட புகைப்படப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்கள் கண்காட்சியாக வைப்பதற்கு தனியாக அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மற்றும் சுற்றி உள்ள மாவட்டங்களை சேர்ந்த மக்கள் புத்தகத் திருவிழா மற்றும் நெய்தல் கலைத் திருவிழாவில் பங்கேற்று மகிழ வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story