தூத்துக்குடி கோட்டத்தில்293 தபால் நிலையங்களில் தேசிய கொடி விற்பனை: கண்காணிப்பாளர் எம்.பொன்னையா தகவல்


தூத்துக்குடி கோட்டத்தில்293 தபால் நிலையங்களில் தேசிய கொடி விற்பனை: கண்காணிப்பாளர் எம்.பொன்னையா தகவல்
x
தினத்தந்தி 9 Aug 2023 12:15 AM IST (Updated: 9 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி கோட்டத்தில் 293 தபால் நிலையங்களில் தேசிய கொடி விற்பனை நடைபெறுவதாக கண்காணிப்பாளர் எம்.பொன்னையா தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி கோட்டத்தில் உள்ள 293 தபால் நிலையங்களில் தேசிய கொடி விற்பனை நேற்று தொடங்கியது.

இது குறித்து தூத்துக்குடி கோட்ட தபால் கண்காணிப்பாளர் எம்.பொன்னையா தூத்துக்குடி தலைமை தபால் அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேசிய கொடி விற்பனை

நாட்டின் சுதந்திரதின விழாவை முன்னிட்டு கடந்த ஆண்டு பொதுமக்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றுவதற்கு பிரதமர் வேண்டுகோள் விடுத்து இருந்தார். அதன்படி பொதுமக்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றினர். அதே போன்று இந்த ஆண்டும் சுதந்திரதினத்தையொட்டி வீடுகளில் தேசிய கொடியேற்றுவதற்கு பிரதமர் வேண்டுகோள் விடுத்து உள்ளார். இதனால் பொதுமக்களுக்கு தேசிய கொடி அதிக அளவில் கிடைப்பதற்காக தபால் நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி தூத்துக்குடி கோட்டத்தில் உள்ள 3 தலைமை தபால் நிலையங்கள், 75 தபால் அலுவலகங்கள், 215 கிராம தபால் நிலையங்கள் ஆக மொத்தம் 293 தபால் நிலையங்களில் தேசிய கொடிகள் விற்பனை நேற்று தொடங்கப்பட்டது.

ஒரு தேசிய கொடி ரூ.25-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை நேரடியாக தபால் நிலையங்களில் பெறலாம். கடந்த ஆண்டு 25 ஆயிரம் தேசிய கொடிகள் விற்பனை செய்யப்பட்டன. இந்த ஆண்டு சுமார் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை தேசிய கொடிகள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கிறோம்.

பேரணி

சுதந்திரதினத்தை முன்னிட்டு வீடுகளில் பொதுமக்கள் தேசிய கொடியேற்ற வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தபால் ஊழியர்களின் பேரணி 4 இடங்களில் நடத்தப்படுகிறது. அதன்படி வருகிற 11-ந் தேதி தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டத்திலும், 12-ந் தேதி சாத்தான்குளம், திருச்செந்தூர் பகுதியில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்படுகிறது. மேலும் போஸ்டல் பேமெண்ட் வங்கி கணக்கு தொடங்குவதற்காக நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் அதிக அளவில் கணக்கு தொடங்கி வருகின்றனர். நடப்பு ஆண்டில் இதுவரை சுமார் 8 ஆயிரம் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது, உதவி கோட்ட கண்காணிப்பாளர் வசந்த சிந்துதேவி, தலைமை தபால் நிலைய அலுவலர் ராஜா, வணிக நிர்வாக அதிகாரி பொன்ராம்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story