தூத்துக்குடியில், பிட்காயின் மூலம்ரூ.12 லட்சம் மோசடியில்மேலும் ஒருவர் கைது


தூத்துக்குடியில், பிட்காயின் மூலம் ரூ.12 லட்சம் மோசடியில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் பிட்காயின் மூலம் ரூ.12 லட்சம் மோசடியில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பிட்காயின்

தூத்துக்குடி அருகே உள்ள விளாத்திகுளம் வவ்வால்தொத்தியைச் சேர்ந்தவர் ராமர் (வயது 48). இவரது முகநூல் கணக்கில் பிட்காயின் இன்வெஸ்ட்மெண்ட் சம்பந்தமாக ஒரு விளம்பரம் வந்துள்ளது. இதனை பார்த்த ராமர், அதில் உள்ள லிங்க் மூலம் உள்ளே சென்று உள்ளார்.

அதில் இருந்த வாட்ஸ்-அப் எண்ணை தொடர்பு கொண்டு, பின்னர் அவர்கள் கொடுத்த இணைய தளத்தில் ரூ.12 லட்சத்து 10 ஆயிரத்து 740 முதலீடு செய்து உள்ளார். அதன்பிறகு தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ராமர் இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

கைது

புகாரின் பேரில் தூத்துக்குடி தலைமையிடத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மேற்பார்வையில், சைபர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுதாகர், வசந்தகுமார் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

அதன்பேரில், ஏற்கனவே கோவை சின்னியம்பாளையத்தை சேர்ந்த சாமிராஜ் மகன் கருணாகரன் (32), திருவள்ளுர் காக்கலூர் ஆசிரியர் காலனியைச் சேர்ந்த எபினேசர் மகன் ஓபேத் பால் (38) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் புதூர் மின்நகரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சஞ்சீவ்குமார் (42) என்பவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு ஐபோன் பறிமுதல் செய்யபப்பட்டது. கைது செய்யப்பட்ட சஞ்சீவ்குமார் தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story