திருவொற்றியூரில், ராக்கெட் பட்டாசு விழுந்து: குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது; தீயில் சிக்கி மூதாட்டி பலி


திருவொற்றியூரில், ராக்கெட் பட்டாசு விழுந்து: குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது; தீயில் சிக்கி மூதாட்டி பலி
x

திருவொற்றியூரில் ராக்கெட் பட்டாசு விழுந்து குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது. இதில் தீயில் சிக்கி மூதாட்டி பலியானார்.

சென்னை

திருவொற்றியூர், ராஜா சண்முகம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மல்லிகா (வயது 65). இவர், சங்கர் என்பவரது வீட்டின் மாடியில் உள்ள குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

தீபாவளி பண்டிகையையொட்டி அப்பகுதியில் நேற்று முன்தினம் காலை முதல் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. காலை 11 மணி அளவில் திடீரென்று ராக்கெட் பட்டாசு ஒன்று தீப்பொறியுடன் பறந்து வந்து மல்லிகாவின் குடிசை வீட்டின் மீது விழுந்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவென் பரவி குடிசை முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.

மூதாட்டி மல்லிகாவால் குடிசை வீட்டில் இருந்து உடனடியாக வெளியே வரமுடியாததால் தீயில் சிக்கிக்கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த கீழ் வீட்டில் இருந்த வீட்டின் உரிமையாளர் சேகர், உடனடியாக மேலே சென்று மல்லிகாவை மீட்டார்.

அப்போது அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. மூதாட்டி மல்லிகாவின் உடல் முழுவதும் தீயில் கருகியது. மேலும் அவரது வீட்டில் இருந்த கட்டில், பீரோ பாத்திரங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீக்கிரையாகின.

உயிருக்கு போராடிய மல்லிகாவை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி மூதாட்டி மல்லிகா பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி சாத்தாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல் அன்னை சிவகாமி நகரில் சுந்தரி, மணி உள்பட 6 பேரின் குடிசை வீடுகள் பட்டாசால் தீப்பிடித்து எரிந்தது. தீ விபத்து ஏற்பட்ட வீடுகளை கே.பி. சங்கர் எம்.எல்.ஏ, திருவொற்றியூர் மேற்கு பகுதி தி.மு.க. செயலாளர் அருள்தாஸ், கவுன்சிலர்கள் திரவியம், கே.பி.சொக்கலிங்கம் தம்பையா, வடசென்னை கிழக்கு மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் லயன் வி.தியாகராஜன் ஆகியோர் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம், அரிசி, பருப்பு, பாய் உள்ளிட்ட நிவாரண உதவிகள் வழங்கினர்.

மேலும் தீ விபத்தில் பலியான மூதாட்டி மல்லிகாவின் இறுதிச்சடங்கிற்காக ரூ.20 ஆயிரம் நிதி உதவி வழங்கிய கே.பி.சங்கர் எம்.எல்.ஏ., மூதாட்டி உடல்தகனம் முடியும் வரை உடனிருந்தார்.

அதேபோல் அன்னை சிவகாமி நகரில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 6 குடும்பங்களுக்கும் வருவாய்த்துறையினர் திருவொற்றியூர் தாசில்தார் அருள் தலைமையில் நேரில் சென்று ஆய்வு செய்து தலா ரூ.5 ஆயிரம், 5 கிலோ அரிசி வழங்கினர். அ.தி.மு.க சார்பில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம், அரிசி, வேட்டி, சேலை ஆகியவற்றை முன்னாள் எம்.எல்.ஏ. கே.குப்பன் வழங்கினார்.

திருவொற்றியூர் ராஜாஜி நகரைச்சேர்ந்த சங்கர் என்பவரது பழைய பிளாஸ்டிக் குடோனில் பட்டாசால் தீப்பிடித்து, அருகில் இருந்த 3 குடிசைகளுக்கும் தீ பரவியது. இதில் 3 குடிசைகளும் எரிந்து நாசமானது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அ.தி.மு.க கவுன்சிலர் டாக்டர் கே.கார்த்திக் நிவாரண உதவிகளை வழங்கினார்.

ஆவடி அருந்ததிபுரம் 4-வது தெருவைச் சேர்ந்த லட்சுமி (45), ராதிகா (22) ஆகியோர் மாடியில் குடிசை வீட்டில் வசித்து வந்தனர். கீழ் வீட்டில் சரண்யா (28) என்பவர் வசித்து வருகிறார். ராக்கெட் பட்டாசு விழுந்து இவர்களது 3 குடிசைகளும் தீப்பிடித்து எரிந்தது.

ஆவடி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் 3 குடிசைகளும் முற்றிலும் எரிந்து நாசமானது. வீட்டில் இருந்த பொருட்கள், முக்கிய ஆவணங்கள் தீயில் சாம்பலானது. இதுபற்றி ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேற்கு தாம்பரம், காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் மேனகா (60). இவர், மகனுடன் வெளியே சென்று இருந்தார். அப்போது பட்டாசு தீப்பொறி விழுந்ததில் மேனகாவின் குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது.

தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தும், குடிசை முற்றிலும் எரிந்துபோனது. வீட்டில் இருந்த 3 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் மற்றும் டி.வி., பிரிட்ஜ், வாஷிங்மிஷின் உள்பட ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. இதுபற்றி தாம்பரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கோயம்பேடு, ஜெய் நகர் பகுதியில் பட்டாசுகள் வெடித்தபோது தீப்பொறி விழுந்து அங்கிருந்த 3 தென்னை மரங்கள் அடுத்தடுத்து தீப்பிடித்து எரிந்தது. கோயம்பேடு தீயணைப்பு நிலைய வீரர்கள் தென்னை மரத்தின் உச்சியில் எரிந்த தீயை அணைத்தனர்.

இதேபோல் அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ. பகுதியில் பட்டாசு தீப்பொறி விழுந்ததில் 2 குடிசைகள் தீயில் எரிந்து சாம்பலானது. தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

ஜமீன் பல்லாவரம் மலங்கநந்தபுரம் பகுதியில் பட்டாசு வெடித்ததில் வேளாங்கண்ணி ராஜா, ஏசுதாஸ், கம்சாபீவி ஆகியோரது குடிசை வீடுகளும், பம்மல் பகுதியில் ராதிகா மற்றும் தேவராஜ் ஆகியோரது வீடுகளும் தீப்பிடித்து எரிந்தது. இதில் வீடுகளில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின.

தீ விபத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை பல்லாவரம் எம்.எல்.ஏ. இ.கருணாநிதி நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார். அப்போது மண்டல தலைவர்கள் ஜோசப் அண்ணாதுரை, வே.கருணாநிதி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

சென்னையை அடுத்த கீழ்கட்டளை மேடவாக்கம் நெடுஞ்சாலையில் இரும்பு பொருட்கள் கடை நடத்தி வருபவர் சுந்தர். இவரது கடையின் அருகில் பெயிண்ட் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த கிடங்கில் நேற்று முன்தினம் இரவு பட்டாசு விழுந்து தீப்பிடித்து எரிந்தது.

தீயை அணைக்க முயன்ற சுந்தரின் தம்பி சுபாஷ் (40) கையில் காயம் ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் மேடவாக்கம், தாம்பரம், வேளச்சேரி, பெருங்களத்தூர் பகுதியில் இருந்து 6 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத் தனர். எனினும் கடையில் இருந்த சுமார் ரூ.10 லட்சம் மதிப் புள்ள பொருட்கள் தீயில் எரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இது பற்றி மடிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story