திருவள்ளூரில், இன்று மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்


திருவள்ளூரில், இன்று மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்
x

திருவள்ளூரில் இன்று மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

திருவள்ளூர்

தமிழ் மொழிக்காக போராடி உயர்நீத்த தியாகிகளுக்கு தி.மு.க. சார்பில் ஆண்டு தோறும் அஞ்சலி செலுத்தி போற்றுவது வழக்கம். அதன்படி இன்று (புதன் கிழமை) திருவள்ளூரில் நடைபெறும் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.

இதில் பால்வளத்துறை அமைச்சரும், தி.மு.க.வின் திருவள்ளூர் மாவட்ட செயலாளருமான ஆவடி சா.மு.நாசர் மற்றும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் திருத்தணி எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ., திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்.எல்.ஏ., திருவள்ளூர் எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன், பூந்தமல்லி எம்.எல்.ஏ. ஆ.கிருஷ்ணசாமி ஆகியோர் முதல்-அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதற்காக பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

திருவள்ளூர் வேடங்கிநல்லூரில் பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதியில் மேடை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அப்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனங்கள் அதிக அளவில் வரக்கூடும் என்பதால் அதனை இடையூறின்றி நிறுத்த இடம் தேர்வு செய்யப்பட்டு அங்கும் சுத்தம் செய்யப்பட்டு வாகனங்கள் வரும் வழி நிறுத்தும் பகுதி என தனித்தனியாக பிரித்து அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் பாதையான சென்னையை அடுத்த பூந்தமல்லியில் இருந்து திருவள்ளூர் வரை சாலையின் இரு புறங்களிலும் அடர்ந்து வளர்ந்துள்ள செடிகளை அகற்றியும் சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் வர்ணம் பூசம் பணிகளும் தேங்கியுள்ள மண் குவியல்களும் அகற்றப்பட்டது.

இந்த பொதுக்கூட்டத்தில் மகளிர் அணி, இளைஞரணி மற்றும் மாணவர் அணியினர் திரளாக பங்கேற்க தனித்தனியாக அதன் நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.

மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் நேரில் பார்வையிட்டு நடைபெற்ற வந்த பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.


Next Story