தேனியில், நெடுஞ்சாலைத்துறை நெருக்கடி எதிரொலி:வீடுகளை காலி செய்து வெளியேறிய மக்கள்:மாற்றுஇடம் கிடைக்காததால் உறவினர் வீடுகளில் தஞ்சம்
தேனியில் நெடுஞ்சாலைத்துறையின் ஆக்கிரமிப்பு அகற்றல் தொடர்பான நெருக்கடி எதிரொலியாக வீடுகளை காலிசெய்துவிட்டு வெளியேறிய மக்கள், மாற்று இடம் கிடைக்காததால் உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர்.
சாலையோர குடியிருப்புகள்
தேனி பங்களாமேட்டில் மதுரை சாலையின் இருபுறமும் பல ஆண்டுகளாக மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு 100-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் சிறுகடைகள் உள்ளன. தற்போது மதுரை சாலையில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதனால், சாலை விரிவாக்கம் செய்வதற்காக சாலையோரம் இருந்த நூற்றாண்டுகள் பழமையான புளியமரங்கள் வெட்டி அகற்றப்பட்டு வருகின்றன.
அடர்த்தியான மரங்களால் பசுமை போர்த்தி இருந்த அந்த சாலை தற்போது வெறுமையாய் காட்சி அளிக்கிறது. இந்த சாலையோரம் உள்ள வீடுகள் மற்றும் கடைகளை ஆக்கிரமிப்புகள் என்றும், அங்கு வசிப்பவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும், கடந்த 27-ந்தேதி ஆக்கிரமிப்புகள் அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நெடுஞ்சாலைத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தனர்.
ஆக்கிரமிப்பு அகற்றம்
மாற்று இடம் கொடுக்காமல் வீடுகளை இடிக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து தாலுகா அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால், 27-ந்தேதி நடக்க இருந்த ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.
மற்றொரு புறம் பாலம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில சாலையோரம் பல ஆண்டுகளாக வசித்து வந்த மக்கள் பலர் நேற்று தங்களின் வீடுகளை காலி செய்து வெளியேறினர். வீட்டில் உள்ள உடைமைகள், மேற்கூரை ஆகியவற்றை சரக்கு வாகனங்களில் ஏற்றிச் சென்றனர்.
வீடுகளை காலி செய்த மக்கள்
மாற்று இடம் கிடைக்கும் என்று காத்திருந்த நிலையில் மாற்று இடம் கிடைக்காததால் வீடுகளை காலி செய்த பலரும் தங்களின் உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "இந்த சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு மாற்றுஇடம் கேட்டு 2000-ம் ஆண்டு முதல் கோரிக்கை வைத்து வருகிறோம். இதுவரை மாற்று இடம் கிடைக்கவில்லை.
தற்போது வீடுகளை இடிக்க நெடுஞ்சாலைத்துறையினர் தீவிரம் காட்டி வரும் நிலையிலும் மாற்று இடம் வழங்கப்படவில்லை. வேறுவழியின்றி உடைமைகளுடன் பல குடும்பங்கள் வெளியேறி விட்டார்கள். சிலர் என்ன செய்வது என்றே தெரியாமல் அதே வீடுகளில் வசித்து வருகின்றனர். எனவே, மாற்று இடத்தை தாமதமின்றி கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.