தேனி மாவட்டத்தில் கஞ்சா வியாபாரிகளின் சொத்துகள் முடக்கம்
தேனி மாவட்டத்தில் கஞ்சா வியாபாரியின் சொத்துகள் முடக்கப்பட்டு்ள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.
கஞ்சா விற்பனை
திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. ரூபேஷ்குமார் மீனா உத்தரவின்பேரில், தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே மேற்பார்வையில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் வழக்குகளில் ஈடுபடுவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு கூறியதாவது:-
பெரியகுளம் கைலாசபட்டி ஈ.வே.ரா.பெரியார் தெருவை சேர்ந்தவர் தங்கதேவா (வயது 26). கஞ்சா வியாபாரியான இவரது பெயரில் உள்ள ரூ.34 லட்சத்து 24 ஆயிரம் மதிப்புள்ள வீடு மற்றும் ரூ.5 லட்சத்து 96 ஆயிரத்து 271 மதிப்புள்ள கார், மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைலாசபட்டி கூர்மையா கோவில் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (22). இவரது ரூ.4 லட்சத்து 52 ஆயிரத்து 85 மதிப்புள்ள வீடு மற்றும் ரூ.46 லட்சத்து 3 ஆயிரத்து 642 மதிப்புள்ள வங்கிக் கணக்கு மற்றும் மோட்டார் சைக்கிள் கார் உள்பட அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது.
சொத்துகள் முடக்கம்
இதேபோல் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 169 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 484 கிலோ 213 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த வழக்குகளில் தொடர்புடைய 278 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதில் 34 பேர் குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்பட்டனர். ஓடைப்பட்டி காவல் நிலையத்தில் 52 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் ஓடைப்பட்டி போலீசாரால் கைது செய்யப்பட்ட 6 போ் மற்றும் அவரது உறவினர்களின் வங்கி கணக்கும் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் முருகன் என்பவரது உறவினர்களின் பெயரில் உள்ள சொத்துகள் அனைத்தும் முடக்கப்பட்டது.
மாவட்டத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 187 வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மற்றும் அவரது உறவினர்களின் 282 வங்கி கணக்குகள் தற்போது வரை முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.