நிலங்களை உழவு செய்யும் பணியில் விவசாயிகள் ஆர்வம்
பருவமழையை எதிர்பார்த்து ஆர்.எஸ்.மங்கலம் பகுதிகளில் விவசாய நிலங்களில் உழவு செய்யும் பணியில் விவசாயிகள் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆர்.எஸ்.மங்கலம்,
பருவமழையை எதிர்பார்த்து ஆர்.எஸ்.மங்கலம் பகுதிகளில் விவசாய நிலங்களில் உழவு செய்யும் பணியில் விவசாயிகள் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர்.
பருவமழை
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆண்டு தோறும் பருவமழை சீசனை எதிர்பார்த்தே விவசாயிகள் விவசாய பணிகளை தொடங்குகின்றனர். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்க உள்ள நிலையில் ஆர்.எஸ்.மங்கலம், மங்கலம், அரியாங்கோட்டை, சோழந்தூர், ஆனந்தூர், ஊரணங்குடி உள்ளிட்ட பல கிராமங்களிலும் விவசாய நிலங்களில் டிராக்டர் மூலம் உழவு செய்யும் பணியிலும் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் உழவு செய்யப்பட்ட விவசாய நிலங்களில் விதைநெல்களை தூவும் பணியும் மற்றொரு புறம் நடைபெற்று வருகின்றது.
இது குறித்து ஆர்.எஸ்.மங்கலம் பகுதியை சேர்ந்த விவசாயி முருகன் கூறியதாவது:- கடந்த ஆண்டு பருவமழை சீசனில் மழை பெய்யாவிட்டாலும் பெரிய கண்மாயில் தேக்கி வைக்கப்பட்டிருந்த வைகை தண்ணீரை பயன்படுத்தி நெல் விவசாயம் செய்தோம்.
விவசாய பணி
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால் வைகை அணையிலும் தண்ணீர் இருப்பு போதிய அளவு இல்லை. இதனால் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு வைகை தண்ணீர் வருமா என்ற ஒரு சந்தேகமே இருந்து வருகின்றது. அதுபோல் பருவமழை சீசன் தொடங்க இன்னும் ஒரு மாத காலமே உள்ளது. அதனால் பருவமழை சீசனிலாவது நல்ல மழை இருக்கும் என்று எதிர்பார்ப்பில் விவசாய நிலங்களில் விதைநெல்களை தூவும் பணியில் ஈடுபட்டு வருகின்றோம் என்றார்.
இதேபோல் மாவட்டத்தின் அனைத்து கிராமங்களிலும் பருவமழை சீசனை எதிர்பார்த்து விவசாயிகள் விவசாய நிலங்களில் உளவு செய்து விதைநெல்களை தூவும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.