விதை நெல்களை தூவும் பணியில் விவசாயிகள் ஆர்வம்
பருவமழையை எதிர்பார்த்து திருஉத்தரகோசமங்கை பகுதிகளில் விவசாய நிலங்களில் விதை நெல்களை தூவும் பணியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
விவசாய பணிகள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை சீசனை எதிர்பார்த்து தான் விவசாயிகள் விவசாய பணிகளையே தொடங்குகின்றனர். கடந்தாண்டு பருவமழை மாவட்டத்தில் அதிக அளவு பெய்யாததால் நெல் விவசாயம் முழுமையாகவே பாதிக்கப்பட்டது. வைகை தண்ணீர் வந்த ராமநாதபுரம் காவனூர், திருஉத்தரகோசமங்கை, களக்குடி, சத்திரக்குடி சில கிராமங்களில்தான் நெல் விவசாயம் நன்றாக இருந்தது. பெரும்பாலான ஊர்களில் தண்ணீர் இல்லாமல் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டது.
இந்த ஆண்டு பருவமழை சீசன் தொடங்க இன்னும் ஓரிரு வாரங்களே உள்ள நிலையில் திருஉத்தரகோசமங்கை, களக்குடி, மேலச்சீத்தை, களரி உள்ளிட்ட பல கிராமங்களிலும் விவசாயிகள் விவசாய நிலங்களில் டிராக்டர் மூலம் செய்து விவசாய பணிகளை தொடங்கிவிட்டனர்.
பருவமழைைய எதிர்பார்த்து
திருஉத்தரகோசமங்கை, களக்குடி பகுதிகளில் விவசாயிகள் உழவு செய்யப்பட்ட நிலத்தில் விதை நெல்களை தூவும் பணியிலும் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து திருஉத்தரகோசமங்கை கிராமத்தை சேர்ந்த விவசாயி பூமிநாதன் கூறியதாவது, கடந்தாண்டு பருவமழை போதிய அளவு பெய்யாததால் நெல் விவசாயம் அதிகமாக பாதிக்கப்பட்டது.
இந்த ஆண்டாவது பருவமழை சீசனில் மழை நன்றாக பெய்யும் என்ற மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளோம். பருவமழையை எதிர்பார்த்து சுமார் 5 ஏக்கரில் நெல் விவசாய பணிகளை தொடங்கி விதை நெல்களை தூவி வருகின்றேன்.
இவ்வாறு அவர் கூறினார்.