'நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெறும்'- திண்டுக்கல் லியோனி பேச்சு


நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெறும்- திண்டுக்கல் லியோனி பேச்சு
x

‘நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெறும்’ என்று திண்டுக்கல் லியோனி பேசினார்.

திருநெல்வேலி

நெல்லை டவுன் வாகையடி முக்கில் தி.மு.க சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி பொதுக்கூட்டம் நடைபெற்றது. தலைமை செயற்குழு உறுப்பினர் ஏ.எல்.எஸ்.லட்சுமணன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் மாலை ராஜா ஆகியோர் பொதுக்கூட்டத்தை தொடங்கி வைத்தனர்.

இதில் மாநில கொள்கை பரப்பு செயலாளரும், தமிழ்நாடு பாடநூல் வாரிய தலைவருமான திண்டுக்கல் ஐ.லியோனி, நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

கூட்டத்தில் திண்டுக்கல் ஐ.லியோனி பேசுகையில், 'திரை உலகில் எம்.ஜி.ஆரை சின்னவர் என்று பட்ட பெயருடன் அழைப்பார்கள். அவருக்கு பிறகு சின்னவர் என்று பட்டம் பெற்று இருப்பவர் உதயநிதி ஸ்டாலின்.

பிரதமர் மோடி திருக்குறள் உச்சரிப்பது, தமிழில் பேசுவது என நடித்து வருகிறார். ஆனால் திருக்குறள் தந்த தமிழை ஆட்சி மொழியாக்காமல், மேடை தோறும் சொல்வது பெருமை அளிக்காது. மோடியின் ஏமாற்று வேலையை வட இந்தியர்கள் நம்பி ஏமாறுவார்கள். ஆனால் தமிழர்கள் ஏமாற மாட்டார்கள்‌. காசியில் சங்கமம் நிகழ்ச்சி நடத்தினார்கள். அதில் இசை அமைப்பாளர் இளையராஜா சமஸ்கிருத பாடலை பாடினார். காசி சங்கமும் போன்று எத்தனை நாடகங்கள் போட்டாலும் தமிழர்கள் ஏமாறமாட்டார்கள். இங்கு பா.ஜனதா பாட்ஷா பலிக்காது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியை சிறப்பாக நடத்தி வருகிறார். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் அடையாளம் காட்டும் நபரே பிரதமராக வருவார். 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் கையில் வெற்றிக்கனியை ஒப்படைப்போம்' என்றார்.

கூட்டத்தில் நெல்லை மாநகர செயலாளர் சு.சுப்பிரமணியன், மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, தச்சநல்லூர் பகுதி செயலாளர் தச்சை சுப்பிரமணியன், மாவட்ட துணை செயலாளர் விஜிலா சத்யானந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story