மாவட்ட சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் பணிக்கு விண்ணப்பிக்க உதவி மையம் தொடக்கம்
தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் பணிக்கு விண்ணப்பிக்க உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது
தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில், இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இணையவழியில் விண்ணப்பம் பதிவு செய்வதற்கு உதவும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் பயிற்சி அளிக்கப்பட்ட போலீசார் இங்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர். எனவே, இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள், இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்தல் குறித்த விவரங்களை இந்த உதவி மையத்தை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். இந்த உதவி மையம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 15-ந்தேதி வரை காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். இந்த மையத்தை 04546-253106 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.