புதிய வணிக வளாக கட்டிடத்தில்நீச்சல் குளம்போல் தேங்கும் தண்ணீர்
புதிய வணிக வளாக கட்டிடத்தில் நீச்சல் குளம்போல் தண்ணீர் தேங்குகிறது.
ஈரோடு மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கனி மார்க்கெட்டில் சுமார் ரூ.50 கோடி செலவில் புதிய வணிக வளாகம் கட்டப்பட்டு உள்ளது. 300-க்கும் மேற்பட்ட கடைகள் கொண்ட இந்த வணிக வளாகத்தை வாடகைக்கு விடும் நடவடிக்கையை மாநகராட்சி அதிகாரிகள் எடுத்து வருகிறார்கள். புதிய வணிக வளாக கடைகளுக்கான வைப்புத்தொகை, வாடகை ஆகிவற்றை குறைக்க வேண்டும் என்றும், ஏற்கனவே கனிமார்க்கெட்டில் ஜவுளி கடை நடத்தி வருபவர்களுக்கு கடைகள் வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இந்த நிலையில் கனிமார்க்கெட் புதிய வணிக வளாகத்தில் நீச்சல் குளம் போல தண்ணீர் நிரம்பி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இங்கு தரை தளம், கீழ் தரை தளம் என்று 2 தளங்கள் வாகன நிறுத்த பகுதிகளாக உள்ளது. இதில் கீழ் தரை தளத்தில் தான் சுமார் 3 அடி உயரத்துக்கு மேல் தண்ணீர் தேங்கி இருக்கிறது. பல நாட்களாக தண்ணீர் தேங்கி கிடப்பதால் கொசு உற்பத்தியாகும் பகுதியாக வணிக வளாகம் மாறி உள்ளது. எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வியாபாரிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.