நெல்லை மாநகராட்சி கூட்டத்தில்தி.மு.க. கவுன்சிலர்கள் கோஷ்டி மோதல்


நெல்லை மாநகராட்சி கூட்டத்தில்தி.மு.க. கவுன்சிலர்கள் கோஷ்டி மோதல்
x

நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர். கூச்சல், அமளி ஏற்பட்டதால் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர். கூச்சல், அமளி ஏற்பட்டதால் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

மாநகராட்சி கூட்டம்

நெல்லை மாநகராட்சி கூட்டம் நேற்று ராஜாஜி கூட்ட அரங்கில் நடந்தது. மேயர் பி.எம்.சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ, ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தை தொடங்கி வைத்து மேயர் பி.எம்.சரவணன் பேசியதாவது:-

பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ராணுவத்தினர் உயிர் தியாகம் செய்தால் அவர்களது குடும்பத்திற்கு வழங்கப்படும் கருணைத்தொகை ரூ.20 லட்சத்தை ரூ.40 லட்சமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

பேனா நினைவு சின்னம்

மொழி போராட்டத்தில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் பல கொடுமைகளை அனுபவித்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் தியாகத்தை போற்றும் வகையில், அவரது பேனாவுக்கு மதிப்பளிக்கும் வகையில், நெல்லை வர்த்தக மையம் முன்பு பேனா நினைவு சின்னம் அமைக்கப்படும்.

நெல்லை முன்னாள் மேயர் ஏ.எல்.சுப்பிரமணியனின் சேவையை பெருமைப்படுத்த பேட்டை ம.தி.தா. இந்து கல்லூரிக்கு செல்லும் சாலைக்கு ஏ.எல்.சுப்பிரமணியன் சாலை என பெயர் சூட்டப்படும். பாளையங்கோட்டை ரகுமத் நகரில் சதக்கத்துல்லா கல்லூரிக்கு செல்லும் சாலைக்கு எம்.ஏ.கே.தயாப் ஐ.ஏ.எஸ். பெயர் வைக்க வேண்டும் என்று கவுன்சிலர் ஜெகநாதன் வைத்த கோரிக்கையை ஏற்று அந்த பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

வாக்குவாதம்

அப்போது கவுன்சிலர் ஜெகநாதன், சாலைக்கு பெயர் வைக்க உத்தரவிட்ட மேயருக்கும், துணை மேயருக்கும், அப்துல் வகாப் எம்.எல்.ஏ., ஆணையாளர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து கவுன்சிலர் உலகநாதன், சென்னையில் பல்நோக்கு மருத்துவமனைக்கு கருணாநிதி பெயர் சூட்டப்பட்டதற்கும், மதுரை கலைஞர் நூலகம் திறக்கப் பட்டதற்கும் பாராட்டு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், என்று கூறிக்கொண்டிருந்தார்.

அப்போது கவுன்சிலர் ராமகிருஷ்ணன் எழுந்து, `இந்தக்கூட்டத்தை நடத்துகிறீர்களே கூட்டம் நடத்துவதற்கு தேவையான கோரம் இல்லையே', என்று கூறி வாக்குவாதத்தை தொடங்கினார்.

அதற்கு மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி, கூட்டத்திற்கு கோரம் இருக்கிறது. 30-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் கையெழுத்திட்டு இருப்பதாக கூறி மினிட் புத்தகத்தை காட்டி விளக்கினார்.

கருணாநிதி நூற்றாண்டு விழா

இதைத்தொடர்ந்து துணை மேயர் கே.ஆர்.ராஜூ பேசுகையில், அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்தியதற்கும், முறப்பநாடு குடிநீர் திட்டத்தை அறிவித்ததற்கும், நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்திற்கு வசதியாக புதை மின்தடம் பதிப்பதற்கும் உத்தரவிட்ட முதல்-அமைச்சர், அமைச்சர்கள், அப்துல் வகாப் எம்.எல்.ஏ. ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும், என்றார்.

கூச்சல்

துணை மேயர் பேசிக் கொண்டிருக்கும்போதே தி.மு.க. கவுன்சிலர்கள் ராமகிருஷ்ணன், ரவீந்திரன் உள்ளிட்டோர் அவசரக்கூட்ட தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது என்று கூறி கூச்சல் எழுப்பிக்கொண்டு மேயர், ஆணையாளர் இருக்கை அருகே வந்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. கவுன்சிலர்கள் பவுல்ராஜ், சுந்தர், அல்லாபிச்சை உள்ளிட்ட கவுன்சிலர்கள் கோஷமிட்டனர்.

கோஷ்டி மோதல்

தீர்மானங்களை ஒத்திவைக்க வேண்டும் என்று சிலரும், தீர்மானங்களை வாசித்து விவாதம் நடத்தி நிறைவேற்ற வேண்டும் என்று சிலரும் கூறினர்.

தி.மு.க. கவுன்சிலர்களே இரண்டு கோஷ்டியாக நின்று மோதலில் ஈடுபட்டனர். இதனால் கூட்டத்தில் கூச்சல், குழப்பம், அமளி ஏற்பட்டது.

ஆணையாளர் சமரசம்

கூச்சல்-குழப்பத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்களை ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி தனது இருக்கையில் இருந்து இறங்கி வந்து இருதரப்பினருக்கும் நடுவில் நின்று கொண்டு சமரசம் செய்து வைத்தார்.

அப்போது கவுன்சிலர்கள் ஒருவரையொருவர் அடிக்க பாய்ந்தனர். அப்போதும் ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி நடுவில் நின்று சமரசம் செய்து வைத்தார்.

கூட்டம் ஒத்திவைப்பு

இந்த நிலையில் 10 நிமிடம் கூட்டத்தை ஒத்தி வைப்பதாக கூறிவிட்டு மேயர் பி.எம்.சரவணன் இருக்கையில் இருந்து எழுந்து சென்று விட்டார். இருந்தாலும் தி.மு.க. கவுன்சிலர்கள் இரு கோஷ்டியாக நின்று தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

சிலர் கூட்டத்தை விட்டு வெளியே சென்று விட்டனர். வெளியே செல்லாத கவுன்சிலர்களை ரவீந்திரன் வெளியே வருமாறு கூறினார். இதைத்தொடர்ந்து தி.மு.க. கவுன்சிலர்கள் ஒரு சிலர் வெளியே சென்றனர்.

இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

போலீஸ் பாதுகாப்பு

மாநகராட்சி கூட்டத்தையொட்டி நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சரவணகுமார், உதவி போலீஸ் கமிஷனர் ராஜேஷ்வரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


Next Story