உழைப்பாளர் வாழ்வில், எண்ணற்ற திட்டங்களால் ஒளியேற்றியது தி.மு.க. அரசு : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்
உழைப்பால் உலகுக்கு ஒளி வழங்கும் உழைப்பாளர் வாழ்வில், எண்ணற்ற திட்டங்களால் ஒளியேற்றியது தி.மு.க. அரசு என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தொழிலாளர் தினம் இன்று கொண்டாப்படுவதை முன்னிட்டு சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் உள்ள மே தின நினைவு சின்னத்திற்கு சிவப்பு சட்டை அணிந்து சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்நிலையில் உழைப்பாளர் வாழ்வில், எண்ணற்ற திட்டங்களால் ஒளியேற்றியது தி.மு.க. அரசு தான் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "பரந்து பட்ட மானுடம் தழைக்க வியர்வை நீர் பாய்ச்சும் பாட்டாளிகள் அனைவருக்கும் இனிய #MayDay வாழ்த்துகள்!
உழைப்பால் உலகை வடிவமைக்கும் சிற்பிகளாம் தொழிலாளத் தோழர்களின் நலன் காப்பதில் தி.மு.கழகமும், திராவிட மாடல் அரசும் என்றென்றும் முன்னிற்கும். திராவிட இயக்க இலட்சியங்கள், பொதுவுடைமைக் கொள்கைகளால் நிறைந்தது! அதனால்தான் கருப்பும் சிவப்பும் கலந்து இருக்கிறது!
உழைப்பால் உலகுக்கு ஒளி வழங்கும் உழைப்பாளர் வாழ்வில், எண்ணற்ற திட்டங்களால் ஒளியேற்றியது தி.மு.க. அரசு.
தங்களது இரத்தத்தையே வியர்வையாகச் சிந்தி உழைக்கும் தொழிலாளத் தோழர்களுக்கு முத்தமிழறிஞர் கலைஞர் நிறுவிய மே நாள் நினைவுச் சின்னத்துக்கு மரியாதை செலுத்தினேன்" என்று அதில் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.