குளச்சல் கடல் பகுதியில் சூறைக்காற்று: கடலுக்கு சென்ற விசைப்படகுகள் பாதியிலேயே கரை திரும்பின


குளச்சல் கடல் பகுதியில் சூறைக்காற்று: கடலுக்கு சென்ற விசைப்படகுகள் பாதியிலேயே கரை திரும்பின
x

குளச்சலில் மீன் பிடி தடைக்காலம் முடிந்து கடலுக்கு சென்ற விசைப்படகுகள் பாதியிலேயே கரைக்கு திரும்பியதால் மீனவர்கள் கவலையடைந்துள்ளனர்.

கன்னியாகுமரி:

மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலங்களில் விசைப்படகுகள் மீன் பிடிக்க மத்தியரசு 60 நாட்கள் தடை விதித்துள்ளது. இந்த தடைக்காலம் குமரி மாவட்டத்தில் 2 பருவ காலமாக உள்ளது.

கன்னியாகுமாரி சின்னமுட்டம் கடல் பகுதிகள் கிழக்கு கடற்கரையில் உள்ளதால் அங்கு கடந்த ஏப்ரல் 15 ம் தேதி முதல் ஜூன் 15 வரை தடைக்காலம் அமலில் இருந்தது. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்கள் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ளது. இந்த கடற்கரையில் கடந்த ஜூன் 1 முதல் ஜூலை 31 ம் தேதி நள்ளிரவு வரை தடைக்காலம் அமலில் இருந்தது.

இதையடுத்து நேற்று காலை முதல் மேற்கு கடற்கரை பகுதி விசைப்படகினர் மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதற்காக விசைப்படகினர் கடந்த சில நாட்களாக தயாராகி வந்தனர்.

இந்நிலையில் கடலில் நேற்று முதல் 3 ம் தேதி வரை மணிக்கு 50 கி.மீ. வேகம் வரை சூறைக்காற்று வீசும் என மீன்துறை மீனவர்களுக்கு வானிலை எச்சரிக்கை விடுத்தது. ஆனால் இந்த தகவல் வருவதற்கு முன்பே விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிக்கு சென்று விட்டன.

மீன் பிடிப்பதற்கு சென்ற படகுகள் கடலில் வீசிய காற்றில் தொடர்ந்து படகை செலுத்த முடியாததால் அவை பாதியிலேயே கரை திரும்பின. நேற்று இரவு வரை சுமார் 75 படகுகள் கரை திரும்பி குளச்சல் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது. மீதி படகுகள் கரையை நோக்கி திரும்பிக்கொண்டிருக்கின்றன என மீனவர்கள் தெரிவித்தனர்.

2 மாத தடைக்காலத்திற்கு பின்பு மீண்டும் மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகள் முதல் நாளிலேயே நேற்று பாதியிலேயே கரை திரும்பியதால் மீனவர்கள் கவலையடைந்துள்ளனர்.


Next Story