கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில்கருப்பு பன்னீர் திராட்சை விலை உயர்வு:கிலோ ரூ.40-க்கு விற்பனை
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் கருப்பு பன்னீர் திராட்சை விலை உயர்ந்தது.
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நெல், வாழை, தென்னை விவசாயத்திற்கு அடுத்தபடியாக கருப்பு பன்னீர் திராட்சை அதிக அளவில் விவசாயம் செய்யப்படுகிறது. அங்கு திராட்சை விவசாயத்திற்கு ஏற்ப மிதமான தட்பவெப்ப நிலை நிலவுவதால் தமிழ்நாட்டிலேயே ஆண்டுதோறும் திராட்சை பழம் விளையும் இடமாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விளங்குகிறது.
இங்கு விளையும் கருப்பு பன்னீர் திராட்சை மதுரை, கோவை, சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலமான கேரளாவுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. தற்போது தமிழகம் முழுவதும் அனல் காற்றுடன் வெயில் கொளுத்தி வருவதால் பழங்களின் விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக பன்னீர் திராட்சை விலையும் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ கருப்பு பன்னீர் திராட்சை ரூ.30-க்குவிற்பனை செய்யப்பட்டது. தற்போது ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, வெப்ப காலங்களில் திராட்சை விளைச்சல் எதிர்பார்த்த அளவு இருக்காது .இதனால் தற்போது திராட்சை பழத்தை கிலோ ரூ.40-க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். ஆனால் சில்லறை விலையில் கிலோ ரூ,50-க்கு விற்பனையாகிறது என்றனர்.