வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் சிறப்பு முகாம் இன்றும், நாளையும் நடக்கிறது
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் சிறப்பு முகாம் இன்றும், நாளையும் நடக்கிறது.
2023-ம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 9-ந் தேதி வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள பொதுமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த விண்ணப்பங்கள் அடுத்த மாதம் (டிசம்பர்) 8-ந் தேதி வரை பெறப்படுகிறது. சிதம்பரம், விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில், கடலூர், திட்டக்குடி, பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, புவனகிரி ஆகிய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் முதற்கட்டமாக கடந்த 12 மற்றும் 13-ந் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.
இந்த நிலையில் 2-வது கட்டமாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் சிறப்பு முகாம் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) 2 நாட்கள் நடக்கிறது. அதனால் 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து கடலூருக்கு இடம் பெயர்ந்தவர்கள், வார்டுகளுக்குள் இடம் பெயர்ந்தவர்கள், பெயர் சேர்த்தல், நீக்கம் உள்ளிட்ட பணிகளுக்காக பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று விண்ணப்பித்து பயன் பெறலாம்.
மேலும் https://www.nvsp.in/மற்றும் https://voterportal.eci.gov.in/ஆகிய இணையதள முகவரி மூலமாகவும் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், ஆதார் எண் இணைத்தல் ஆகியவற்றை மேற்கொள்ளலாம்.
மேற்கண்ட தகவல் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.