திமுக ஆட்சியில் ஏழை மக்கள் வாழ்வில் ஏற்றம் இல்லாமல் ஏமாற்றமே வந்துள்ளது - ஜி.கே.வாசன்


திமுக ஆட்சியில் ஏழை மக்கள் வாழ்வில் ஏற்றம் இல்லாமல் ஏமாற்றமே வந்துள்ளது - ஜி.கே.வாசன்
x
தினத்தந்தி 30 July 2022 5:59 PM IST (Updated: 30 July 2022 6:00 PM IST)
t-max-icont-min-icon

தி.மு.க ஆட்சியில் ஏழை மக்கள் வாழ்வில் ஏற்றம் இல்லாமல் ஏமாற்றமே வந்துள்ளது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி தெரிவித்தள்ளார்.

திருப்பூர்,

தி.மு.க. அரசின் மக்கள் விரோத மின்சார கட்டண உயர்வை கண்டித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று காலை திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு திருப்பூர் மாநகர் மாவட்ட தலைவர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சேதுபதி வரவேற்றார்.

கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-

கடந்த 6 மாதத்தில் தி.மு.க. ஆட்சி பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல், மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்காமல் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

கடந்த 3 மாதங்களில் 2 பெரிய அணுகுண்டை மக்கள் மீது தாக்கியிருக்கிறார்கள். சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வால் மக்களை வதைக்கும் செயலில் ஆட்சியாளர்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். தி.மு.க. அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன் கூறியவற்றை தற்போது செய்யவில்லை.

தமிழக தொழில் துறையில் வளரும் மாவட்டமாக, பல லட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் மாவட்டமாக திருப்பூர் மாவட்டம் மற்றும் கொங்கு மண்டலம் விளங்கி வருகிறது. மின்கட்டண உயர்வால் தொழில்கள், தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என்பதற்கு எடுத்துக்காட்டாக திருப்பூர் லட்சக்கணக்கானவர்களுக்கு வாழ்வளித்து வருகிறது. கொரோனா ஊரடங்குக்கு பிறகு நூல் விலை உயர்வால் பெரிதும் தொழில் பாதிக்கப்பட்டது.

ஒரு சில மாதங்களுக்கு முன், சொத்துவரியை உயர்த்தியது. அதன்பிறகு மின்கட்டணத்தை உயர்த்த உத்தேசித்துள்ளது. அனைத்து தரப்பினரையும் சிரமத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது. இந்திய ஜவுளி ஏற்றுமதியில் திருப்பூரின் பங்கு 36 சதவீதம் ஆகும்.

மின்கட்டண உயர்வால் தொழிற்சாலைகள், தொழிலாளர்கள், அவர்களின் குடும்பத்தினர் பாதிக்கப்படுவார்கள். மாநகரில் வாடகை வீட்டில் அதிகம் பேர் வசிக்கிறார்கள். சொத்துவரி, மின்கட்டண உயர்வால் வாடகை உயர்ந்து துன்பத்தில் உள்ளனர்.

ஆட்சி மாற்றம் வரும். மக்கள் வாழ்வில் ஏற்றம் வரும் என்று தி.மு.க. கூறியது. ஏழைகள் வாழ்வில் ஏற்றம் வராமல் ஏமாற்றமே வந்துள்ளது. தி.மு.க.வின் பொய் வாக்குறுதியால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story