மாவட்டத்தில் 13140 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்
மாவட்டத்தில் 13140 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டு உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் 13 ஆயிரத்து 140 மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டு உள்ளது.
இலவச திட்டங்கள்
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை மூலம் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு பல்வேறு இலவச திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பாடப்புத்தகம், நோட்டு புத்தகங்கள், சீருடைகள், காலணிகள், வண்ண பென்சில்கள், அட்லஸ் புத்தகம், புத்தகப்பை, வடிவியல் பெட்டி, இலவச பஸ் பயண அட்டை ஆகியவற்றுடன் இலவச சைக்கிள் என இந்த திட்டங்கள் நீளுகின்றன.
நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிக்கல்வித்துறை மூலம் அனைத்து திட்டங்களின் பொருட்களும் உரிய மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
13,140 சைக்கிள்கள்
இந்தநிலையில் கடந்த ஆண்டு பிளஸ்-1 படித்த மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் பணி சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் 5 ஆயிரத்து 550 மாணவர்கள், 7 ஆயிரத்து 590 மாணவிகள் என 13 ஆயிரத்து 140 சைக்கிள்கள் அந்தந்த பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, 'தகுதியான அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கப்படும். மொத்தம் உள்ள சைக்கிள்களில் இதுவரை 90 சதவீதம் அளவுக்கு சைக்கிள்கள் மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள சைக்கிள்களும் ஓரிரு நாட்களில் முழுமையாக வழங்கப்படும்' என்றார்கள்.