ரேஷன் அரிசி கடத்தியதாக பறிமுதல் செய்த வாகனத்தை விடுவிக்கக்கோரிய வழக்கில் தொழுநோய் இல்லத்துக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்- ஐகோர்ட்டு உத்தரவு
ரேஷன் அரிசி கடத்தியதாக பறிமுதல் செய்த வாகனத்தை விடுவிக்கக்கோரிய வழக்கில் தொழுநோய் இல்லத்துக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
ரேஷன் அரிசி பறிமுதல்
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த குமரேசன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "புதுக்கோட்டை பகுதியில் இருந்து ரேஷன் அரிசி கடத்தி சென்றதாக வழக்கு பதிவு செய்து, மினி லாரியை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தில் வைத்துள்ளனர். இந்த லாரியை விடுவிக்க உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதி சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ரேஷன் அரிசி கடத்தியதாக பறிமுதல் செய்த வாகனத்தை கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் அல்லது அரசுடைமையாக்க வேண்டும். அதற்கு பதிலாக பறிமுதல் செய்த வாகனத்தை போலீஸ் நிலையத்தில் வைத்திருப்பது ஏற்புடையதல்ல. இதனால் வாகனம் பழுதாகி பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்று விடும் என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ரூ.10 ஆயிரம்
விசாரணை முடிவில், ரேஷன் அரிசி கடத்தி சென்ற வாகனத்தை பறிமுதல் செய்ய போலீசாருக்கு உரிமை உள்ளது. அதில் கோர்ட்டு தலையிடவில்லை. ஆனால், பறிமுதல் செய்த வாகனத்தை போலீஸ் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாமா? என்ற கேள்வி எழுகிறது. போலீஸ் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் என்ன பயன்? இதுபோன்ற வழக்குகளில், பறிமுதல் செய்த வாகனங்களை சம்பந்தப்பட்ட கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெளிவாக கூறியுள்ளது.
எனவே, பறிமுதல் செய்த வாகனத்தை வழக்கு விசாரணைக்கு தேவைப்படும்போது கொண்டு வர வேண்டும் என்ற நிபந்தனையுடன் உரிய உத்தரவாதம் பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட போலீசார், அந்த வாகனத்தை மனுதாரரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். அத்துடன் மனுதாரர், மதுரையில் உள்ள அரசு தொழுநோய் இல்லத்துக்கு ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.