ஓட்டலில் ரகளை செய்த விவகாரம்: சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு பணியிடை நீக்கம்
ஓட்டலில் ரகளை செய்த விவகாரம்: சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு பணியிடை நீக்கம்.
சேலம்,
சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் பணியாற்றி வரும் சப்-இன்ஸ்பெக்டர் சிவசக்தி, ஏட்டு செந்தில்குமார் ஆகியோர் சேலம் அம்மாப்பேட்டையில் ஒரு ஓட்டலுக்கு கடந்த 19-ந் தேதி இரவு மதுபோதையில் சென்று ரகளையில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. மேலும் போலீஸ் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. அதன்பேரில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் விசாரணை நடத்தி, அவர்கள் இருவரையும் மாவட்ட ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.
இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ராஜேஸ்வரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த அறிக்கையின் அடிப்படையில் துறைரீதியான நடவடிக்கையாக சப்-இன்ஸ்பெக்டர் சிவசக்தி, ஏட்டு செந்தில்குமார் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் உத்தரவிட்டார்.