இரட்டைக்கொலை வழக்கில் ராணுவ வீரர் உள்பட 5 பேர் கைது
ஆலங்குளம் அருகே இரட்டைக்கொலை வழக்கில் ராணுவ வீரர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே இரட்டைக்கொலை வழக்கில் ராணுவ வீரர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
இரட்டைக்கொலை
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்துரை. இவருடைய மகன் அசோக்ராஜ் (வயது 27). வக்கீலான இவர் நேற்று முன்தினம் இரவில் வீட்டில் இருந்தபோது, திடீரென்று பின்பக்க வாசல் வழியாக வந்த மர்மகும்பல் அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டியது. இதனை தடுக்க முயன்ற அசோக்ராஜின் அக்காள் அருள்ஜோதியின் (33) கைவிரலிலும் அரிவாள் வெட்டு விழுந்தது. வெட்டு காயமடைந்த அசோக்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
பின்னர் அங்கிருந்து வெளியே ஓடி வந்த கும்பல், சாலையோரம் நின்று கொண்டிருந்த அசோக்ராஜின் பெரியப்பா துரைராைஜயும் (55) அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடியது. பலத்த காயமடைந்த துரைராஜ், அருள்ஜோதி ஆகியோரை சிகிச்சைக்காக நெட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி துரைராஜ் பரிதாபமாக இறந்தார். அருள்ஜோதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீசார் விசாரணை
இறந்த அசோக்ராஜ், துரைராஜ் ஆகியோரது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த இரட்டைக்கொலை சம்பவம் குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலீசாரின் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-
நிலத்தகராறு
வீரகேரளம்புதூரைச் சேர்ந்தவர் மைனர் பாண்டி. இவருக்கு சொந்தமான நிலம், நெட்டூரில் அசோக்ராஜ் வீட்டின் அருகில் உள்ளது. அந்த நிலத்தின் அருகில் அசோக்ராஜ் தரப்பினர் தங்களுக்கும் இடம் உள்ளதாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதில் மைனர் பாண்டிக்கு சாதகமாக கோர்ட்டில் தீர்ப்பு வந்தது.
இதையடுத்து அந்த நிலத்தை மைனர்பாண்டி விற்க முடிவு செய்தார். இதற்காக அவர், நெட்டூரில் வசிக்கும் உறவினரான ராணுவ வீரர் சுரேஷ் (27) மூலம் நிலத்தை விற்க ஏற்பாடு செய்தார். அந்த இடத்தை சுரேசின் நண்பரான சேலத்தைச் சேர்ந்த விக்டர் வாங்கினார்.
போலீசில் புகார்
இதற்கிடையே, அந்த நிலம் தொடர்பாக அசோக்ராஜ் தரப்பினர் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதுதொடர்பாக அசோக்ராஜ் தரப்பினருக்கும், சுரேஷ் தரப்பினருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது.
நேற்று முன்தினம் அசோக்ராஜ், அவருடைய பெரியப்பா துரைராஜ் ஆகியோருக்கு சொந்தமான வைக்கோல்போரை சுரேஷ் தரப்பினர் தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அசோக்ராஜ் தரப்பினர் ஆலங்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் தரப்பினர் அசோக்ராஜ், துரைராஜ் ஆகியோரை வெட்டிக்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
5 பேர் கைது
இந்த இரட்டைக்கொலை தொடர்பாக, ராணுவ வீரர் சுரேஷ், அவருடைய தந்தை குழந்தைபாண்டி (60), மைனர்பாண்டியின் மகன்கள் மகாராஜன் (32), குமார் (30), உறவினரான நெட்டூர் வடக்கு தெருவைச் சேர்ந்த நடராஜன் மகன் சரவணன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் தலைமறைவான குழந்தைபாண்டியின் மனைவி ஜக்கம்மாளை வலைவீசி தேடி வருகின்றனர்.
சாலைமறியல்
இதற்கிடையே, அசோக்ராஜ், துரைராஜ் ஆகியோரின் உடல்கள் வைக்கப்பட்டு இருந்த பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை அறை அருகில் நேற்று மதியம் ஏராளமான வக்கீல்கள், உறவினர்கள் திரண்டனர்.
அவர்கள் நெல்லை- தூத்துக்குடி மெயின் ரோட்டில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, குற்றவாளிகளை கைது செய்து உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து வக்கீல்கள், உறவினர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
தொடர்ந்து பிரேத பரிசோதனைக்கு பின்னர் அசோக்ராஜ், துரைராஜ் உடல்களை உறவினர்கள் பெற்று சென்றனர்.