ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் மின்வாரிய அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை


ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் மின்வாரிய அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை
x

மின்இணைப்பு பெற ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் மின்வாரிய அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

திருவள்ளூர்

திருவள்ளூர்,

திருமுல்லைவாயல் அடுத்த கன்னடபாளையம் அஸ்வினி நகரை சேர்ந்தவர் ஜனார்த்தன ராவ். இவர் அயப்பாக்கம் பவானி நகர் எம்.ஜி.ஆர் தெருவில் தனக்கு சோந்தமான இடத்திற்கு மின் இணைப்பு வேண்டி அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கம் மின்வாரிய அலுவலகத்தில் அதற்குண்டான கட்டணத்தை செலுத்தி விண்ணப்பித்தார். ஆனால் அவரது விண்ணப்பத்தை பரிசீலனை செய்யாமல் 3 மாதங்களாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததாக தெரிகிறது.

இதையடுத்து ஜனார்த்தன ராவ் அயப்பாக்கம் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று அங்கு பணியில் இருந்த சென்னை இளநிலை பொறியாளர் தனசேகரன் என்பவரிடம் மின் இணைப்பு வழங்க அணுகியுள்ளார். அப்பொழுது தனசேகரன் ரூ.6 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் தான் மின் இணைப்பு வழங்க முடியும் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத ஜனார்த்தன ராவ் இதுகுறித்து சென்னை லஞ்ச ஒழிப்பு சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் ரசாயன பவுடர் தடவப்பட்ட ரூ.4 ஆயிரம் பணத்தை ஜனார்த்தன ராவிடம் கொடுத்து அனுப்பினர்.

அவர் பணத்தை எடுத்துக்கொண்டு அயப்பாக்கம் மின்வாரிய அலுவலகம் சென்று இளநிலை பொறியாளர் தனசேகரனிடம் கொடுத்த போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தனசேகரனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இந்த வழக்கானது திருவள்ளூர் முதன்மை குற்றவியல் நடுவர் மற்றும் சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட அயப்பாக்கம் முன்னாள் மின்வாரிய இளநிலை பொறியாளர் தனசேகரனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.


Next Story