தாளவாடி மலைப்பகுதியில்தக்காளி விலை வீழ்ச்சி
தாளவாடி மலைப்பகுதியில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
தாளவாடி
தாளவாடி மலைப்பகுதியில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
50 ஏக்கரில் தக்காளி சாகுபடி
ஈரோடு மாவட்டத்தின் கடைகோடியில் கடல் மட்டத்தில் இருந்து 1,105 மீட்டர் உயரத்தில் உள்ள பகுதி தாளவாடி. தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான கொங்கள்ளி, பனகஹள்ளி, தொட்டகாஜனூர் பாரதிபுரம், கெட்டவாடி, தலமலை, அருள்வாடி, திகனாரை போன்ற 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கத்தரி, வெண்டை, தக்காளி, பீட்ரூட், சிவப்பு முள்ளங்கி, முட்டைகோஸ், சின்னவெங்காயம், பீன்ஸ் போன்ற பயிர்களை பயிரிடுவது வழக்கம்.
தற்போது இந்த பகுதியில் 50 ஏக்கர் பரப்பளவில் தக்காளியை விவசாயிகள் சாகுபடி செய்து உள்ளனர். தற்போது அறுவடைக்கு தயாராக தக்காளி உள்ளது.
ஆனால் தக்காளியை வாங்க வரும் வியாபாரிகள் கிலோ ஒன்று ரூ.3 முதல் ரூ.4 வரை வாங்குகின்றனர். உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.
விலை வீழ்ச்சி
இதுகுறித்து தாளவாடியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், '3 மாத பயிரான தக்காளியை பயிரிட நாற்று நடுதல், களை எடுத்தல், உரம், மருந்து என ஏக்கர் ஒன்றுக்கு ரூ.80 ஆயிரம் வரை செலவு ஆகிறது. கடந்த 3 மாதத்துக்கு முன்பு ஒரு கிலோ தக்காளியை ரூ.25 வரை வியாபாரிகள் கொள்முதல் செய்தனர்.
ஆனால் தற்போது ஒரு கிலோ ரூ.3 முதல் ரூ.4 வரை மட்டுமே கொள்முதல் செய்கின்றனர். விலை வீழ்ச்சியால் தக்காளி பயிருக்கு செலவு செய்த அசல் தொகை கூட கிடைப்பதில்லை. எனவே பழுத்த தக்காளியை விவசாயிகள் அப்படியே செடியில் விட்டுவிடுகின்றனர்,' என்றனர்.