ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் கிடந்த சூட்கேசால் பரபரப்பு
ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் கிடந்த சூட்கேசால் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் காரில் வந்த நபர்கள் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் சூட்கேஸ் ஒன்றை வீசிவிட்டு சென்றதாக தெரிகிறது. இது குறித்து ராஜீவ்காந்தி நினைவிடத்தில் இருந்த மத்திய பாதுகாப்பு படையினர் ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் மாவட்ட போலீஸ் தலைமைக்கு தெரிவித்தார்.
சூட்கேசில் வெடிகுண்டு இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மோப்ப நாய்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது.
ஸ்ரீபெரும்புதூர் தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலை முடக்கப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர். சோதனை முடிவில் அந்த பெட்டியில் சோப்பு, பேஸ்ட், சீப்பு உளிட்ட பொருட்கள் இருந்தது, வேறு எதுவும் இல்லாததால் போலீசார் நிம்மதி அடைந்து அங்கு இருந்து கலைந்து சென்றனர்.
இதனால் இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.