சிங்கம்புணரியில் பொரி தயாரிக்கும் பணி மும்முரம்


சிங்கம்புணரியில் பொரி தயாரிக்கும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 22 Oct 2023 12:15 AM IST (Updated: 22 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரி பகுதியில் ஆயுதபூஜையை முன்னிட்டு பொரி தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

சிவகங்கை

சிங்கம்புணரி,

பொரி தயாரிக்கும் பணி

ஆயுத பூஜை விழாவின் போது முக்கியமாக வைக்கப்படுவது பொரியாகும். தற்போது ஆயுதபூஜையை முன்னிட்டு பொரி தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. சிங்கம்புணரி பகுதியில் தயாரிக்கப்படும் பொரிக்கு சிவகங்கை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களிலும் தனி மவுசு உண்டு. இப்பகுதியில் சுமார் 80 ஆண்டுகளுக்கு மேலாக பொரி தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும் இங்கு தயாரிக்கப்படும் பொரிகள் மூடை, மூடைகளாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் பொரியை சிறுவர் முதல் முதியவர் வரை விரும்பி சாப்பிடுகின்றனர்.

கலப்படமின்றி

சிங்கம்புணரியில் தயாரிக்கப்படும் பொரி இனிப்பு கலந்த சுவையுடன் மொறு மொறு தன்மையுடன் இருக்கும். சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, போன்ற மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் நேரடியாக இங்கு வந்து பொரிகளை வாங்கி சென்று விற்பனை செய்கிறார்கள். மேலும் பல மாநிலங்களுக்கும் பொரி லாரிகள் மூலம் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

பல இடங்களில் பொரி தயாரிப்பு நவீன முறையில் பின்பற்றப்பட்டு வந்தாலும் சிங்கம்புணரியில் விறகு அடுப்புகளை பயன்படுத்தி, பாரம்பரிய முறைப்படி ரசாயன கலப்படமின்றி இயற்கையான முறையில் பொரி தயாரிக்கப்படுகிறது.

வெளி மாநிலங்களுக்கும்

இது குறித்து சிங்கம்புணரி பகுதியை சேர்ந்த பொரி தயாரிக்கும் தொழில் செய்து வரும் மகேஸ்வரன் கூறுகையில், நான்கு தலைமுறையாக பொரி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். நாங்கள் தயாரிக்கும் பொரி ரசாயன கலப்படமின்றி நெல்லை பயன்படுத்தி முறையாக பதப்படுத்தப்பட்டு அதற்கு தேவையான தண்ணீர், இனிப்பு, உப்பு போன்றவைகள் சரிசமமாக கலந்து விறகு அடுப்புகளை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது.

இங்கு தயாராகும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. தற்போது ஆயுதபூஜையை முன்னிட்டு பொரி அதிகமாக தேவைப்படுவதால் 2 ஷிப்டுகள் மூலம் பொரி தயாரிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து தீபாவளி, கார்த்திகை, தைப்பொங்கல் போன்ற பண்டிகைகள் தொடர்ச்சியாக வருவதால் பொரி தயாரிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருவதாக அவர் கூறினார்.


Related Tags :
Next Story