ராமேசுவரத்தில், இருசக்கர வாகன பிரசாரம்
கடல் பசுவை பாதுகாப்பது குறித்து ராமேசுவரத்தில், இருசக்கர வாகன பிரசாரம் நடந்தது.
ராமேசுவரம்,
சர்வதேச கடல் பசு தினமானது வருகின்ற 28-ந் தேதி அன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி கடல் பசுவை அழிவிலிருந்து பாதுகாக்கவும், மீனவர்களின் வலைகளில் கடல் பசு சிக்கினால் அதை பாதுகாப்பாக மீண்டும் கடலுக்குள் விடுவது குறித்தும் மீனவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்திய வன உயிரின நிறுவனம் சார்பில் ராமேவரத்தில் இருந்து நேற்று இருசக்கர வாகன விழிப்புணர்வு பிரசாரம் தொடங்கியது. மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவிடத்திலிருந்து தொடங்கிய இந்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பிரசாரத்தை மாவட்ட வன உயிரின காப்பாளர் மகான் ஜெகதீஷ் சுதாகர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ராமேசுவரம் மீன்துறை உதவி இயக்குனர் ஜெய்லானி, மற்றும் வனத்துறையின் மண்டல அதிகாரிகள் திலகவதி, கவுசிகா, பிரதாப், வனபாதுகாப்பு படையின் வனச்சரகர் பாலமுருகன், மண்டபம் வனச்சரகர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ராமேசுவரத்தில் இருந்து தொடங்கிய பிரசாரம் பாம்பன், மண்டபம், உச்சிப்புளி வழியாக நேற்று ராமநாதபுரம் வரை நடைபெற்றது.