ராமேஸ்வரத்தில் 100 மீட்டர் தூரத்திற்கு திடீரென கடல் நீர் உள்வாங்கியதால் பரபரப்பு
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் திடீரென கடல் நீர் சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கியது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ராமநாதசுவாமி கோவிலுக்கு நாள்தோறும் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவ்வாறு வருகை தரும் பக்தர்கள் அங்குள்ள அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடிவிட்டு கோவிலில் சாமி தரிசனம் செய்கின்றனர்.
இந்நிலையில் இன்று பக்தர்கள் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடிக்கொண்டிருந்தபோது திடீரென கடல் நீர் சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் உடனடியாக கடலில் இருந்து வெளியேறி கரைக்குத் திரும்பினர். கடல் நீர் உள்வாங்கியதால் பாறைகளும், கடலில் போடப்பட்ட சாமி சிலைகளும் வெளியே தெரியத் தொடங்கின.
கடல் நீர் திடீரென உள்வாங்கியது தொடர்பாக ஆய்வாளர்கள் கூறுகையில், காலநிலை மாற்றம் காரணமாக சிறிது நேரத்திற்கு கடல் உள்வாங்குவதும், பின்னர் இயல்பு நிலைக்கு வருவதும் சாதாரணமானதுதான் எனவும், இதனால் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.