புஞ்சைபுளியம்பட்டியில் சுற்றுலா வாகன உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்
புஞ்சைபுளியம்பட்டியில் சுற்றுலா வாகன உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன.
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டியில் சுற்றுலா வாகன உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலைநிறுத்தம்
தமிழ்நாடு சுற்றுலா வாடகை வாகனங்களின் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர் தமிழகம் முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி நேற்று புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் சுற்றுலா வாகன உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுற்றுலா வாகனங்களுக்கு உயர்த்தப்பட்ட வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். சுற்றுலா வாகனங்களின் இருக்கைகளை உயர்த்த தமிழக அரசு அனுமதி தர வேண்டும். சொந்த பயன்பாட்டுக்கு இயக்கப்படும் வாகனங்களை வாடகைக்கு இயக்குவதை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.
வாழ்வாதாரம் பாதிப்பு
வேலைநிறுத்த போராட்டத்தையொட்டி சுற்றுலா வேன், கார், ஜீப் என 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் நேற்று புஞ்சைபுளியம்பட்டியில் அந்தந்த வாகன நிறுத்தங்களில் நிறுத்தப்பட்டு இருந்தன. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் கூறும்போது, 'சொந்த பயன்பாட்டுக்கு இயக்கப்படும் வாகனங்களை முறைகேடாக வாடகைக்கு இயக்குவதால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களில் உள்ளது போல சுற்றுலா வாகனங்களின் இருக்கைகளை அதிகப்படுத்தி அனுமதிச் சீட்டு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.