பள்ளப்பட்டியில், 2-வது நாளாக ஆட்டுச்சந்தை களை கட்டியது
பள்ளப்பட்டியில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 2-வது நாளாக ஆட்டுச்சந்தை களை கட்டியது. இதனால் ரூ.2 கோடிக்கும் மேல் ஆடுகள் விற்பனை நடந்தது.
பக்ரீத் பண்டிகை
அரவக்குறிச்சி அருகே பள்ளப்பட்டியில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வசித்து வருகிறார்கள். இங்கு வசிப்பவர்கள் பெரும்பாலும் வெளி மாவட்டத்திற்கும் மற்றும் வெளிமாநிலத்திற்கும் வியாபாரம் ரீதியாகவும் வேலை ரீதியாகவும் சென்று விடுகிறார்கள். முக்கியமான பண்டிகை நாட்களில் பள்ளப்பட்டிக்கு வருவார்கள்.
பள்ளப்பட்டியில் ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிகைக்கு முஸ்லிம்கள் செம்மறி ஆடுகள் வாங்கி ஆட்டை அறுத்து மூன்று பங்காக பிரித்து ஒரு பங்கை தனக்கும், ஒரு பங்கை உறவினர்களுக்கும், ஒரு பங்கை ஏழை எளியவர்களுக்கும் வழங்குவது வழக்கம்.
ஆட்டுச்சந்தை
இதற்கு குர்பானி என்று அழைக்கப்படுகிறது. பள்ளப்பட்டியில் ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிகைக்கு முன்பு ஆட்டுச் சந்தை நடைபெறும். இந்தாண்டும் பள்ளப்பட்டியில் உழவர் சந்தை அருகில் நேற்று முன்தினம் மாலை ஆட்டுச்சந்தை கூடியது. இங்கு வெளியில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை வாங்கி வந்து விற்றனர். பலதரப்பட்ட ஊர்களில் இருந்து விவசாயிகள் தாங்கள் வளர்த்த ஆடுகளை நேரடியாகவே பள்ளப்பட்டி சந்தையில் வந்து விற்றுச் சென்றனர்.
ரூ.2 கோடிக்கு விற்பனை
இதையடுத்து நேற்று காலையும் மீண்டும் ஆட்டுச்சந்தைகூடியது. இதனால் சுமார் 2000-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக குவிந்தன. இதனை பொதுமக்கள், வியாபாரிகள் போட்டி, போட்டு கொண்டு வாங்கி சென்றனர். இதனால் 2-வது நாளாக சந்தை களைக்கட்டி காணப்பட்டது.
இதன் மூலம் சுமார் ரூ.2 கோடிக்கும் மேல் ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும், சந்தையில், ஆடுகளுக்கு தேவையான தீவனங்களும் விற்கப்பட்டன. இதனையும் தனியாக விலை கொடுத்து வாங்கி சென்றதை காண முடிந்தது.