மின்சார சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்வாரிய தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்


மின்சார சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து  மின்வாரிய தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
x

மின்சார சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்வாரிய தொழிலாளர்கள் தேனியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசை கண்டித்து அவர்கள் ஆர்ப்பாட்டமும் செய்தனர்.

தேனி

காத்திருப்பு போராட்டம்

மின்சார சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் நடந்தன. அதன்படி, தேனி என்.ஆர்.டி. நகரில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு இன்று காலை 8.30 மணியளவில் மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மின்வாரிய தொழிலாளர்கள் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, மின்சார சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து காலை 11 மணியளவில் இந்த சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் மின்வாரிய தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இதில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

6 மணி நேரம்

மக்களவையில் மின்சார சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அவர்கள் அறிவித்தனர். இந்த போராட்டத்துக்கு சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க மாநில துணைத்தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ., எல்.பி.எப். உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பேசினர்.

மாலை 5 மணி வரை இந்த காத்திருப்பு போராட்டம் நடந்தது. சுமார் 6 மணி நேர காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்து, மாநில, மத்திய மைய அமைப்புகளின் வழிகாட்டுதல்படி அடுத்தக்கட்ட போராட்டங்களில் ஈடுபடுவது என்று கூறி, அங்கிருந்து தொழிலாளர்கள் கலைந்து சென்றனர். இதேபோல் கூடலூர் அருகே சுருளியாறு நீர்மின் நிலையம் மற்றும் லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story