நாசரேத்தில் தொழிலாளியை வெட்டியஅண்ணன், தம்பிக்கு 2½ஆண்டு சிறை
நாசரேத்தில் தொழிலாளியை வெட்டிய அண்ணன், தம்பிக்கு 2½ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தட்டார்மடம்:
நாசரேத்தில் முன்விரோதத்தில் தொழிலாளியை வெட்டிய வழக்கில் அண்ணன், தம்பிக்கு 2½ ஆண்டு சிறை தண்டனை விதித்து சாத்தான்குளம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
அரிவாள் வெட்டு
நாசரேத்தை சேர்ந்த ஏசுதாஸ் மகன் பவுல்சன். இவருக்கும், பக்கத்து வீட்டு பெண்ணுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை எதிர்வீட்டைச் சேர்ந்த தொழிலாளியான ஆபேத் (37) என்பவர் கண்டித்துள்ளார். இதில் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2018-ஆம் ஆண்டு ஆபேத் மகன் அப்பகுதியில் விளையாடச் சென்றுள்ளார். இந்த நிலையில் ஆபேத் தனக்கு இடையூறாக இருப்பதாக கூறி பவுல்சன், சகோதரர் கில்டன் என்ற கிளாஸ்டன், அவர்களது தந்தை ஏசுதாஸ் ஆகியோர் ஆபேத் மகனை அடித்து விரட்டி உள்ளனர். இதனை தட்டி கேட்ட ஆபேத்தை அவர்கள் அரிவாளால் வெட்டினர்.
அண்ணன், தம்பிக்கு சிறை
இதுகுறித்து ஆபேத் அளித்த புகாரின் பேரில் நாசரேத் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை சாத்தான்குளம் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதற்கிடையில் ஏசதாஸ் காலமாகி விட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கலையரசி ரீனா, நேற்று தீர்ப்பு கூறினார். இதில், குற்றம் சாட்டப்பட்ட பவுல்சன், கில்டன் ஆகியோருக்கு ரூ.10 ஆயிரத்து 500 அபராதமும், தலா 2½ ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு வக்கீல் ராஜ்மோகன் வாதிட்டார்.