நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் 100 கிலோவுக்கு மேல் கழிவுகளை உருவாக்கும் நிறுவனங்களே தரம் பிரித்து உரமாக தயாரிக்கவும்- நகராட்சி ஆணையாளர் வேண்டுகோள்
நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் 100 கிலோவுக்கு மேல் கழிவுகளை உருவாக்கும் நிறுவனங்களே தரம் பிரித்து உரமாக தயாரிக்கவும் என்று நகராட்சி ஆணையாளர் இளம்பரிதி தெரிவித்துள்ளார்.
100 கிலோவுக்கும் அதிகமான கழிவுகள்
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி ஆணையாளர் இளம்பரிதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி திடக்கழிவு மேலாண்மை பணிகள் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2018-ன் படி நகராட்சியில் உள்ள வணிக நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், தொழிற்சாலைகள், உணவகங்கள் திரையரங்குகள். திருமண மண்டபங்கள் மற்றும் ஷாப்பிங் மால்கள் போன்றவற்றில் தினந்தோறும் 100 கிலோவுக்கும் அதிகமான கழிவுகளை உற்பத்தி செய்பவர் மற்றும் 5 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள கட்டிட வளாகம் கொண்டவர்களும் மொத்த கழிவு, உற்பத்தியாளர்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
தரம் பிரிக்க வேண்டும்
இவர்கள் தங்களிடம் உருவாகும் கழிவுகளை மக்கும், மக்காத, மற்றும் அபாயகரமான கழிவுகளாக தரம் பிரிக்க வேண்டும். இதில் மக்கும் கழிவுகளை அவர்களது வளாகத்திலேயே ஏதேனும் ஒரு முறையினை பின்பற்றி செயலாக்கம் செய்து அதனை உரமாகவோ அல்லது மாற்று எரிபொருள் சக்தியாகவோ மாற்ற வேண்டும் என திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2010-ல் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே மொத்த திடக்கழிவு உற்பத்தியாளர்கள் மேற்படி பணிகளை மேற்கொள்ள தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி செயல்படுத்திடவும் அதற்குண்டான தொழில்நுட்ப வசதிகளுக்கும் ஆலோசனைகளுக்கும் நகராட்சி அலுவலக பொது சுகாதார பிரிவை அணுகுமாறும் அல்லது நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி வலைத்தளத்தில் https://tnurbantree.tn.gov.in/guduvancheri தெரிவித்துள்ள வழிகாட்டுதலின்படி செயல்படுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் வரும் 1.7.2023-க்குள் மேற்படி செயலாக்க உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திட வேண்டும் 16.7.2023 அன்று செயலாக்கம் செய்திட கடைசி நாளாக இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.