நாகையில், அனல்போல் தகிக்கும் வெயில்
நாகையில் கோடையை மிஞ்சும் வகையில் வெப்பம் நிலவுகிறது. அனல்போல் தகிக்கும் வெயில் காரணமாக பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
நாகையில் கோடையை மிஞ்சும் வகையில் வெப்பம் நிலவுகிறது. அனல்போல் தகிக்கும் வெயில் காரணமாக பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
கடலோர மாவட்டம்
கடலோர மாவட்டமான நாகை மாவட்டத்தில் பொதுவாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். கோடை காலத்தில் வெயிலின் கொடுமையை பற்றி சொல்லவே வேண்டாம். அந்த அளவுக்கு மக்கள் கடும் அவதிக்கு ஆளாவார்கள்.
ஆனால் இந்த ஆண்டு கோடை காலம் முடிந்த நிலையில் தற்போது வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் என மக்கள் எதிர்பார்த்திருந்த வேளையில் சித்திரை மாத கத்திரி வெயில் போல் கொளுத்துகிறது.
கடும் அவதி
ஆடி மாதத்தில் காத்தாடி (மின்விசிறி) சுவிட்ச் போடாமலேயே சுற்றும். அந்த அளவுக்கு காற்று வீசும். ஆனால் இந்த ஆண்டு ஆடியில் கோடை காலம் மீண்டும் வந்து விட்டதுபோல நாகையில் அனல் தகிக்கிறது. இடையிடையே மழை பெய்து, வெயிலுக்கு வேகத்தடை போட்டாலும், சூரியக்கதிர்களின் தாக்கம் எந்த வகையிலும் தணியாமல், சுட்டெரிப்பதால் நாகை மாவட்ட மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
மேய செல்லும் கால்நடைகள் கூட நிழலை தேடும் நிலைக்கு ஆளாகி உள்ளன. தென்மேற்கு பருவ மழையின் தீவிரம் குறைந்ததால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகிறது.
வெப்பத்தை தணிக்க...
ஆடி மாதத்தில் காவிரி பெருக்கெடுத்து கிராமப்புற பகுதியில் உள்ள ஆறுகள், வடிகால்களில் எல்லாம் வெள்ளம் பாயும். ஆனால் இந்த ஆண்டு காவிரியில் எதிர்பார்த்த தண்ணீர் இல்லாமல் கடைமடை மாவட்டமான நாகை, கானல் நீர் மாவட்டமாக மாறி வருகிறது. ஆறுகள், பாசன வாய்க்கால்களில் குறைந்த அளவே தண்ணீர் செல்கிறது. சில கிராமங்களில் இந்த குறைந்த அளவு தண்ணீர் தான் மக்களுக்கு வெப்பத்தை தணிப்பதற்கான வடிகாலாக உள்ளது.
வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க கிராமப்புறங்களில் சிறுவர்கள் ஆறுகளில் பாய்ந்து ஓடும் தண்ணீரில் குதித்து ஆட்டம் போட்டு மகிழ்கின்றனர். வெயில் காலத்தைபோலவே இந்த மாதமும் கடைகளில் தர்பூசணி, கரும்பு ஜூஸ், இளநீர் விற்பனை தொடர்ந்து மும்முரமாக நடந்து வருகிறது.