மேலப்பாளையம் சந்தையில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நெல்லை மேலப்பாளையம் சந்தையில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நெல்லை மேலப்பாளையம் சந்தையில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
பக்ரீத் பண்டிகை
நெல்லை மேலப்பாளையத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையில் கால்நடை சந்தை நடைபெறுவது வழக்கம். இங்கு விற்கப்படும் ஆடு, மாடு, கோழிகளை ஏராளமான வியாபாரிகள் வந்து வாங்கி செல்வார்கள்.
இந்த நிலையில் பக்ரீத் பண்டிகை வருகிற 29-ந் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின் போது இஸ்லாமியர்கள் ஆடு, மாடுகளை குர்பானி கொடுப்பது வழக்கம்.
நேற்று செவ்வாய்க்கிழமை என்பதால் மேலப்பாளையம் கால்நடை சந்தை நடைபெற்றது. சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. அதிகளவில் செம்மறி ஆடுகள் வந்திருந்தது. இதேபோல் வெள்ளாடுகளும் கொண்டு வரப்பட்டன.
பொட்டு வகை ஆடுகள்
ஆடுகளை வாங்குவதற்காக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, மதுரை, விருதுநகர், அருப்புக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களை சேர்ந்த வியாபாரிகள், பொதுமக்கள் குவிந்தனர். அவர்கள் ஆடுகளை போட்டி போட்டு வாங்கி சென்றனர். ஆடுகள் தரத்திற்கு ஏற்ப ரூ.10 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டன.
அதிகபட்சமாக பொட்டு வகை ஆடுகள் ரூ.35 ஆயிரத்திற்கு விற்பனையானது.
மேலும் கோழி, கருவாடு, மீன், வீட்டு உபயோக பொருட்கள் ரூ.15 லட்சத்துக்கு மேல் விற்பனையாகி உள்ளது. நேற்று முன்தினம் நடந்த மாட்டுச்சந்தையில் ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனையாகி உள்ளது.
ரூ.4 கோடிக்கு விற்பனை
இதுதொடர்பாக வியாபாரிகள் கூறுகையில், 'பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு செம்மறி, வெள்ளாடு என ஏராளமான ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தோம். இதில் செம்மறி ஆடுகள் விற்றுத்தீர்ந்த நிலையில் வெள்ளாடுகள் மட்டும் குறைந்த அளவில் உள்ளன. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் ரூ.4 கோடிக்கு விற்பனையாகி உள்ளது.
ஆயிரக்கணக்கான பொதுமக்களும், 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகளும் வந்து செல்லும் மேலப்பாளையம் கால்நடை சந்தையில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்' என்றனர்.
கடையம் சந்தை
இதேபோல் தென்காசி மாவட்டம் கடையத்தில் நேற்று முன்தினம் சந்தை நடைபெற்றது. ஆடு, மாடுகளை வியாபாரிகள், பொதுமக்கள் வாங்கிச் சென்றனர்.
இங்கு சுமார் ரூ.1½ கோடி வரை ஆடு, மாடுகள் விற்பனையானது.